

கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான iPad மற்றும் அக்சஸரிஸ் சாதனங்களை ‘Let Loose’ நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. இதில் எம்4 சிப் உடன் iPad புரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது இதுவரை வெளியான iPad சாதனங்களில் மிகவும் மெலிதானது என ஆப்பிள் சிஇஓ டிம் குக், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் இரண்டு புதிய iPad மாடல், iPad அப்கிரேட் மாடல், மேஜிக் கீபோர்டு மற்றும் மேஜிக் பென்சில் போன்றவற்றை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.
இதில் எம்4 சிப் தான் ஹைலைட். ஏனெனில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கருத்தில் கொண்டு இந்த சிப்-பை ஆப்பிள் வடிவமைத்துள்ளது. இதனை iPad புரோ மாடலில் ஆப்பிள் நிறுவியுள்ளது. வழக்கமாக புதிய சிப்களை லேப்டாப்பில் தான் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும்.
“புதிய iPad புரோவை பாருங்கள். எம்4 சிப்பில் இயங்கும். எங்கள் நிறுவனம் வடிவமைத்துள்ள மெல்லிய சாதனம். மேம்பட்ட டிஸ்பிளே. இதன் வடிவமைப்பு பின்னணியில் உள்ள விஷயங்களை லேசாக கற்பனை செய்து பாருங்கள்” என டிம் குக் தனது பதிவில் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது போலவே iPad புரோவின் டிஸ்பிளே தற்போது கேட்ஜெட்ஸ் ஆர்வலர்கள் மத்தியில் பேசப்பட்டு உள்ளது.
iPad ஏர் மற்றும் iPad புரோ என இரண்டு மாடலையும் 11 மற்றும் 13 இன்ச் வேரியண்ட்களில் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. இதில் புரோ மாடலில் எம்4 சிப் இடம்பெற்றுள்ளது. iPad புரோ 11 இன்ச் வேரியண்ட் 5.1 மில்லிமீட்டர் மற்றும் 13 இன்ச் வேரியண்ட் 5.3 மில்லிமீட்டர் என மெல்லிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் iPad புரோ 11 இன்ச் Wi-Fi மாடலின் விலை ரூ.99,900 என அறிவிக்கப்பட்டுள்ளது. iPad புரோ 13 இன்ச் Wi-Fi + செல்லுலார் வெர்ஷன் ரூ.1,49,900 என அறிவிக்கப்பட்டுள்ளது.