உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்: 5ஜி-யை விட 20 மடங்கு வேகம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

டோக்கியோ: உலகின் முதல் 6ஜி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது ஜப்பான் நாடு. அந்த நாட்டில் இயங்கி வரும் டெலிகாம் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இதனை கட்டமைத்துள்ளன. இந்த 6ஜி சாதனம் மாதிரி வடிவம் (ப்ரோட்டோடைப்) என்பது குறிப்பிடத்தக்கது.

டோகோமோ, என்டிடி கார்ப்பரேஷன், என்இசி கார்ப்பரேஷன், புஜிட்சு என ஜப்பான் நாட்டின் டெலிகாம் நிறுவனத்தின் கூட்டு முயற்சி இது. கடந்த மாதம் இந்த சாதனத்தை சோதனை செய்து பார்த்ததாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதில் வெற்றியும் கிடைத்துள்ளது.

நொடிக்கு 100 ஜிகாபிட்ஸ் (Gbps) வேகத்தில் இந்த சாதனம் இயங்கியுள்ளது. இன்டோரில் 100 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் உடனும், அவுட்டோரில் 300 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் உடனும் இதன் இயக்கம் சோதிக்கப்பட்டுள்ளது. இது தற்போது உலக அளவில் பரவலாக பயன்பாட்டில் உள்ள 5ஜி-யின் வேகத்தை காட்டிலும் 20 மடங்கு கூடுதல் வேகத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 6ஜி பயன்பாட்டின் மூலம் நிகழ்நேர ஹாலோகிராபிக் கம்யூனிகேஷன், அதிவேக விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவங்களை பயனர்கள் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இதன் ஃப்ரீக்வென்ஸி அடிப்படையில் இதன் டவுன்லோட் வேகம் எப்படி இருக்கும் என்பது சார்ந்து டெக் வல்லுநர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகே சரியாக கணிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 6ஜி? - கடந்த 2022-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 5ஜி நெட்வொர்க் சேவை நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் பரவலாக 5ஜி சேவையை வழங்கி வருகின்றன.

வரும் 2030-க்குள் இந்தியாவில் 6ஜி அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்வில் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், 6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா தலைமை தாங்கும் என கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in