முதல்கட்ட மக்களவைத் தேர்தல் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!
சென்னை: இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர்.
இந்த சூழலில் டெக்னாலஜி உலகின் சாம்ராட்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது கூகுள். இந்நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் திருவிழாவை குறிப்பிடும் வகையில் கூகுள் இதனை வெளியிட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள கூகுள் பயனர்களுக்கு டிஸ்பிளே ஆகும் என தெரிகிறது. இதில் Google என ஆங்கில மொழியில் உள்ள கூகுள் தளத்தின் முகப்பில் உள்ள இரண்டாவது ‘O’-வுக்கு பதிலாக சுட்டு விரலில் வாக்கு செலுத்தியதற்கான அடையாள மையுடன் கூடிய எமோஜி வகையிலான படம் இடம்பெற்றுள்ளது. அது வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பயனர்களும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
