Published : 11 Apr 2024 05:52 PM
Last Updated : 11 Apr 2024 05:52 PM

பாஜக ரூ.39 கோடி, காங். ரூ.9 கோடி - ஜன.1 முதல் ஏப்.11 வரை கூகுள் விளம்பர செலவு

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்கும் சூழலில், கடந்த ஜனவரி 1 முதல் இன்று வரை (ஏப்.11) கூகுள் மூலம் சுமார் 80,000-க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.39,65,92,000 தொகையை பாஜக செலவிட்டுள்ளது. கூகுளின் விளம்பர வெளிப்படைத்தன்மை மையத்தின் (Google’s Ads Transparency Center) புள்ளிவிவரங்களின்படி இது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் கூகுள் விளம்பரத்துக்காக ரூ.9,03,25,750-ஐ இதே காலகட்டத்தில் செலவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், ஒடிசா, பிஹார், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் தலா ரூ.2 கோடிக்கு மேல் விளம்பரத்துக்காக பாஜக செலவிட்டுள்ளதாக கூகுள் இன்சைட் தரவுகள் தெரிவிக்கின்றன. இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து செலவிடப்பட்ட தொகை.

இதில் உத்தரப் பிரதேசம் டாப் லிஸ்டில் உள்ளது. அந்த மாநிலத்துக்காக சுமார் ரூ.3.38 கோடியை பாஜக, கூகுள் ஆன்லைன் விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளது. இந்த செலவு பட்டியலில் லட்சத்தீவு கடைசி இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ரூ.1,82,80,750 செலவிட்டுள்ளது பாஜக. பிப்ரவரியில் விளம்பர செலவு உச்சத்தை எட்டியுள்ளது. பின்னர் அது சரிந்த நிலையில் மார்ச் மாத இறுதியில் அதிகரித்துள்ளது.

இதில் 75 சதவீதம் (ரூ.29.8 கோடி) வீடியோ ஃபார்மெட் விளம்பரத்துக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. ரூ.9.58 கோடி இமேஜ் ஃபார்மெட் விளம்பரத்துக்காக பாஜக செலவு செய்துள்ளது. பாஜகவின் இந்த விளம்பரங்களில் பிரதமர் மோடி மற்றும் கட்சியின் சின்னம் பிரதானமானதாக இடம்பெற்றுள்ளது. தேசத்தின் தொழில்நுட்பம் மற்றும் தொழில் சார்ந்த முக்கிய மைல்கற்கள் இதில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளன. கூடவே ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் சின்ன மெசேஜும் சொல்லப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும் கூகுள் விளம்பரத்துக்காக ரூ.9,03,25,750 இதே காலகட்டத்தில் செலவிட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் விளம்பரத்துக்காக அதிகம் செலவிட்டுள்ளது காங்கிரஸ். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.16,28,51,500 கூகுள் விளம்பரத்துக்காக செலவிடப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவன கொள்கைக்கு உட்பட்டு இந்த விளம்பரங்களை இந்திய விளம்பரதாரர்கள் பதிவு செய்து வருகின்றனர். லொகேஷன், வயது, பாலினம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பயனர்களை இந்த விளம்பரங்கள் டார்கெட் செய்கின்றன. விளம்பரம் குறித்த விவரங்கள் கூகுளின் விளம்பர வெளிப்படைத்தன்மை மையத்தில் சில மணி நேரங்களில் அப்டேட் செய்யப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x