Published : 13 Mar 2024 10:39 PM
Last Updated : 13 Mar 2024 10:39 PM

‘Devin’ - உலகின் முதல் AI மென்பொருள் இன்ஜினியர் அறிமுகம்!

பிரதிநிதித்துவப் படம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் உலகின் முதல் ஏஐ மென்பொருள் இன்ஜினியரை அறிமுகம் செய்துள்ளது ‘காக்னிஷன்’ எனும் நிறுவனம். இதனை ‘டெவின்’ என அழைக்கிறது அந்நிறுவனம். கோடிங் எழுத இதனை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-ன் பிற்பாதியில் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த பேச்சு உலக அளவில் மக்கள் மத்தியில் அதிகரித்தது. அதற்கான விதையை விதைத்தது ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி. அதன் பிறகு பல்வேறு நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ஏஐ வகை சாட் பாட்களை அறிமுகம் செய்தன. வரும் நாட்களில் உலகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆளும் என தெரிகிறது. அந்த வகையில் அதன் இயக்கத்துக்கு உதவும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உலகில் வல்லமை கொண்ட நபராக அறியப்படவும் வாய்ப்பு உண்டு.

இதுவரை டெக்ஸ்ட், இமேஜ், ஆடியோ, வீடியோ ஜெனரேட் செய்து வந்த ஏஐ பாட்களை கொஞ்சம் வித்தியாசமான பணியை செய்ய வைக்கலாம் என காக்னிஷன் நிறுவனம் யோசித்ததன் பலன்தான் டெவின் உருவாக காரணமாக இருந்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள ஏஐ பாட்கள் கோடிங் எழுதும். இருந்தாலும் அதனை மனித மூளைகள் சுலபத்தில் அடையாளம் காண்கின்றனர். அப்படி இருக்காத வகையில் டெவின் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஏஐ டூலில் பயனர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை ப்ராம்ப்ட் (Prompt) செய்தால் போதும். அதன் ரிசல்ட்டை சில நிமிடங்களில் தருகிறது டெவின். இதன் பயனர் அனுபவமும் எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காக்னிஷன் வெளியிட்டுள்ள டெமோ வீடியோவை பார்ப்பதன் மூலம் இது உறுதியாகிறது.

டெவின், இன்ஜினியர் பணிக்கான நேர்காணலில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், பல்வேறு இன்ஜினியரிங் டாஸ்குகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சவாலான பணிகளையும் இந்த ஏஐ டூல் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தானியங்கு முறையில் இயங்குவது மட்டுமின்றி மனித இன்ஜினியர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்நேர அப்டேட் வழங்குவது, டிசைன் சாய்ஸ்களில் இணைந்து பணியாற்றுவது என இது உதவும்.

செயலி வடிவமைப்பு, புரோகிராம் கோடில் உள்ள பக்-கினை (Bug) அடையாளம் காணவும் உதவும். அதோடு அதை ஃபிக்ஸ் செய்தும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக பார்க்கப்படுவதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வெகு விரைவில் குறிப்பிட்ட சில பயனர்களின் பயன்பாட்டுக்கு டெவின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x