விற்பனைக்கு வந்தது ‘கூகுள் கிளாஸ்’

விற்பனைக்கு வந்தது ‘கூகுள் கிளாஸ்’
Updated on
1 min read

இணைய வசதியுடன், பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய கூகுள் கிளாஸ் எப்போது விற்பனைக்கு வரும் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்தது கூகுள் கிளாஸ்.

மற்ற நாடுகளில் உடனடியாக விற்பனை செய்ய முடியாததற்கு, தன் கூகுள் பிளஸ் சமூக ஊடகத்தில் வருத்தம் தெரிவித்துள்ளது கூகுள்.

கூகுள் கிளாஸின் விலை 1,500 டாலர்கள் (சுமார் ரூ.90 ஆயிரம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு இது விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பான பதிவை http://google.com/glass/start/how-to-get-one என்ற தளத்தில் மேற்கொள்ளலாம்.

அதேசமயம் வரையறுக்கப்பட்ட அளவு மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளதால், எத்தனை கூகுள் கிளாஸ்கள் விற்பனை செய்யப்படும் என்பதைத் தெரிவிக்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு எக்ஸ்புளோரர் வகை கூகுள் கிளாஸ் வழங்கப்படும்.

எக்ஸ்புளோரர் வகை கூகுள் கிளாஸில் வழக்கமான மூக்குக் கண்ணாடியில் இருக்கும் கண்ணாடிகள் இருக்காது. வலது கண் முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் திரையில், இணையதள வசதியைப் பயன்படுத்தலாம்.

வரும் ஜூன் இறுதியில், கூகுள் கிளாஸ் தொடர்பான முழு விவரங்கள் அனைத்தையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in