இளமை.நெட்: தெரிந்த இமெயில்; தெரியாத சங்கதிகள்!

இளமை.நெட்: தெரிந்த இமெயில்; தெரியாத சங்கதிகள்!
Updated on
2 min read

வாட்ஸ்அப் யுகத்திலும் இமெயிலுக்கான தேவை குறைந்துவிடவில்லை. அதேநேரம் இமெயில் கலையையும் நாம் இன்னமும் கற்றுத்தேர்ந்துவிடவில்லை. தகவல் தொடர்பு சாதனமாக இமெயிலைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான நுணுக்கங்களும் வழிமுறைகளும் அநேகம் இருக்கின்றன. அதற்குச் சிறந்த உதாரணமாக இமெயிலின் மாற்றுப் பயன்பாடுகளைப் பார்ப்போம். இப்படியும் இமெயிலைப் பயன்படுத்த முடியும் என வியக்கக்கூடிய விஷயங்களை ‘பாப்புலர் சயின்ஸ்’ நாளிதழ் பட்டியலிட்டுள்ளது:

இமெயில் வசதியை கணினியிலும் பயன்படுத்தலாம், ஸ்மார்ட் போனிலும் பயன்படுத்தலாம். இந்தத் தன்மையைக்கொண்டு, இமெயிலை நமது இணையக் குறிப்பேடாகவும் பயன்படுத்தலாம். இமெயிலை உருவாக்கும்போது அதை டிராப்ட் வடிவில் சேமித்துவைக்கும் வசதி இருக்கிறது. முக்கிய விஷயங்கள் அல்லது திடீரெனத் தோன்றும் எண்ணங்களை இமெயில் டிராப்ட் வடிவில் டைப் செய்து வைக்கலாம்.

இமெயில் முகவரி கட்டத்தில் எதையும் டைப் செய்யாமல் இருக்க வேண்டும். இப்படிச் சேமித்து வைக்கும் குறிப்புகளைப் பின்னர் எப்போது தேவையோ அப்போது திறந்து வாசித்துக்கொள்ளலாம். ஸ்மார்ட்போனில் உள்ள குறிப்பேடுகளைவிட இது சிறந்தது. டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

குறிப்பேடு வசதிபோலவே, இமெயிலை டிஜிட்டல் டயரியாகவும் பயன்படுத்தலாம். புதிய மெயிலைத் திறந்து அதில் அன்றைய தின நிகழ்வுகள், நினைவுகளை எழுதி வைக்கலாம். தேவையெனில், ஒளிப்படங்களையும் உடன் இணைக்கலாம். இந்த மெயிலை சுயமெயிலாக நமக்கு நாமே அனுப்பிக்கொள்ளலாம்.

இவற்றுக்கான தலைப்புகள், முக்கிய குறிச்சொற்களையும் அடையாளமாகக் குறிப்பிடலாம். இந்த வகையில் இமெயில் பெட்டியிலேயே டயரி எழுதுவது எளிது. என்றாலும் கைத்தவறி யாருக்கேனும் அனுப்பிவிடாமல் இருப்பதில் கவனம் தேவை.

சுற்றுலாவின்போது எடுத்துக்கொண்ட செல்ஃபி, அலுவலக நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படமோ எதுவாக இருந்தாலும் அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்வது பலரது வழக்கம். தனிப்பட்ட படங்களைச் சமூக ஊடகம் எனும் பொதுவெளியில் பகிராமல் இருப்பதே நல்லது. ஒருவருடைய தனிப்பட்ட படங்கள் இணையத்தில் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே, ஒளிப்படங்கள் பகிர்வதைக் கட்டுப்படுத்திக்கொள்வதே நல்லது.

அதற்காகப் படங்களைப் பகிரவே கூடாது என்றில்லை, யாருடன் பகிர விருப்பமோ அவர்களுடன் மட்டும் பகிரலாம். இதற்கெனத் தனியே ஒரு இமெயில் முகவரி கணக்கைத் தொடங்கிக் கொள்ளுங்கள். இந்த முகவரியிலிருந்து தனிப்பட்ட ஒளிப்படங்களை அனுப்பிவைக்கலாம். இந்த முகவரியைப் படங்களைப் பகிர மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையெனில், இமெயிலில் உள்நுழையும் விவரங்களை நெருக்கமானவர்களிடம் தெரிவித்து அவர்கள் பார்வையிட அனுமதிக்கலாம்.

ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் ஒரு கருத்தைப் பகிர விரும்புகிறீர்கள். ஆனால், அந்தப் பக்கம் போனால் அவற்றிலேயே நேரம் வீணாகலாம் என்ற தயக்கமும் இருக்கிறதா? இதற்கும் இமெயில் மூலமே தீர்வு காணலாம். பல்வேறு இணைய சேவைகளை ஒருங்கிணைக்கும் ஐ.எப்.டி.டி.டி. (If This Then That) என்ற சேவையின் மூலம் ட்விட்டர், ஃபேஸ்புக் சேவையை இமெயிலுடன் ஒருங்கிணைக்க முடியும். இப்படிச் செய்வதால், குறிப்பிட்ட கருத்தை இமெயில் செய்தால், அது ட்விட்டரில் பகிரப்படும்.

இதேபோல வலைப்பதிவையும் பாரமரிக்கலாம். பல வலைப்பதிவு சேவைகள் இமெயில் வாயிலாகப் பதிவுகளை வெளியிட உதவுகின்றன. இந்த வசதியைப் பயன்படுத்தி இமெயிலிலேயே பதிவுகளை எழுதி வலைப்பதிவைப் புதுப்பிக்கலாம்.

வாசிப்பதற்கான விஷயங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. பல நேரம் இணைய உலாவலில் நல்ல கட்டுரைகள் கண்ணில் படும். உடனே அவற்றைப் படித்துப் பார்க்க நேரம் இருக்காது. கவலையே வேண்டாம், இத்தகைய கட்டுரைகளை நமது இமெயிலுக்கு அனுப்பிவைத்துக்கொண்டு, நேரம் கிடைக்கும்போது படிக்கலாம். பெரும்பாலான இணையதளங்கள் இப்படிக் கட்டுரைகளை மின்னஞ்சல் செய்யும் வசதியை அளிக்கின்றன. இதற்காகவே பாக்கெட் (Pocket) அல்லது இன்ஸ்டாபேப்பர் (Instapaper) போன்ற பிரத்யேகச் செயலிகளையும் பயன்படுத்தலாம்.

பேக்கப் செய்வது, அதாவது முக்கியக் கோப்புகளின் நகலை வேறு ஒரு இடத்தில் சேமித்துவைப்பது இணையப் பயன்பாட்டில் மிகவும் முக்கியம். இதற்கும் இமெயில் வசதியைப் பயன்படுத்தலாம். எப்படி? ஒளிப்படம் அல்லது ஆவணங்களின் நகலை இமெயிலில் நம் முகவரிக்கு அனுப்பிவைத்து, அந்த நகலைச் சேமிக்கலாம். இமெயில் பயன்பாட்டில் சேமிப்புத் திறனுக்கான வரம்பு இருக்கிறது.

ஆனாலும் படங்கள், ஆவணங்களின் நகலைச் சேமிக்க இது எளிய வழி. முழுவீச்சிலான பேக்கப் சேவைக்கு மாற்று இல்லை என்றாலும், பயனுள்ள வசதி. வீடியோ போன்ற கோப்புகளைச் சேமிக்க முடியாது. கோப்புகளைச் சேமிப்பதோடு, ஸ்மார்ட்போன்களுக்கான செயலிகள் மூலம் முக்கியக் குறுஞ்செய்திகளையும் மெயிலில் சேமிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in