

அமேசான் இந்தியாவின் பிரிவு, அமேசான் ப்ரைம் மியூஸிக் என்ற பாடல் ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கியுள்ளது. விளம்பரமில்லாத இந்த இசை ஸ்ட்ரீமிங் சேவையில் அலெக்சா என்ற டிஜிட்டல் உதவியாளரை வைத்து பிடித்தமான பாடல்கள், ஆல்பங்கள், கலைஞர்கள் பற்றி கேட்கலாம்.
அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்கு இந்த சேவை முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும். ஆங்கிலம், தமிழ், இந்தி, பஞ்சாபி, பெங்காலி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் லட்சக்கணக்கான பாடல்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்ட் மொபைல்கள், ஆப்பிள் மொபைல்கள், டெஸ்க்டாப் என மூன்று தளங்களிலும் செயலிகள் மூலமாகவும் இந்த சேவையை பயன்படுத்தலாம். அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் அமேசான் எகோ கருவிகளிலும் இந்த இசை சேவையை பயன்படுத்தமுடியும்.
விளம்பரமில்லாத, ப்ரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணமில்லாத இந்த இசை சேவை, உங்களுக்குப் பிடித்தமான இசையை கேட்க நடுவில் வரும் எழுத்து மற்றும் குரல் விளம்பர இடைவேளைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை தரும் என அமேசான் மியூஸிக் இந்தியாவின் இயக்குநர் சாஹஸ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
பயனர்கள் குரல் ஆணைகள் மூலமாகவும் இந்த இசை சேவையை பயன்படுத்தலாம். செயலியில் அலெக்சா என்கிற டிஜிட்டல் உதவியாளர் அம்சத்தை வைத்து பிடித்தமான பாடல்கள், ஆல்பங்கள், கலைஞர்கள் பற்றி கேட்கலாம். பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை பட்டியலிட்டு அந்த பட்டியல்களை நண்பர்களுடன் பகிரலாம்.
அமேசான் ப்ரைம் மியூஸிக் - https://music.amazon.in/home