Last Updated : 24 Jul, 2014 08:56 PM

 

Published : 24 Jul 2014 08:56 PM
Last Updated : 24 Jul 2014 08:56 PM

ஈடு இணையற்ற இணையத்திற்கு வயது 25!

நம் உறவினர்கள், நண்பர்கள், தூரத்து நட்பு வட்டாரங்கள் என அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து ‘மறக்காமல்’ ஒரு நொடியில் சொல்ல முடிகிறது என்றால், அதற்கு காரணம் இன்று நாம் நம்மை இயக்கிக்கொண்டிருக்கும், நாம் இயங்க வைத்துக்கொண்டிருக்கும் சமூக வலைதளங்களே.

அத்தகைய சமூக வலைதளங்களுக்கு ஆணிவேராக கருதப்படும் இணையத்திற்கு வயது 25.

1989-ஆம் ஆண்டு உருவானதுதான் World Wide Web என்ற உலகளாவிய வலை.

நமக்கு 90-களில் பரிச்சயமான இந்த தகவல் பெட்டகம், பல்வேறு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மிக எளிமையான முறையை அளித்தது மட்டுமல்லாமல், உலகத்தையே ஒரு கணினி பெட்டிக்குள் அடக்கி ஆள்கின்றது.

எனினும், எதிலும் பழையன கழிதலும், புதியன புகுதலும் விதிவிலக்கல்ல. அப்படி இணையத்தில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்து, தற்போது காணாமல்போன சில விஷயங்களைப் பார்ப்போம்.

இதில் சமீபத்தில் வழக்கொழிந்து போனது ஆர்குட் என்பது நாம் அறிந்த விஷயமே!

ஆனால், நாம் மறந்துபோன சில தளங்களும், அதில் கிடைத்த அலாதியான அனுபவங்களும் இங்கே…

சாட் ரூம்ஸ் (Chat rooms)

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் வாட்ஸ் ஆப்-பில் (WhatsApp) சாட்டிங் செய்யாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதற்கான அடிக்கல் 90-களில் ‘சாட் ரூம்ஸ்’ என்ற வலைதளத்தால் போடப்பட்டது. ஆன்லைனில் தமது பாதுகாப்பு பற்றி கவலைப்படாத காலத்தில், நண்பர்களுடன் குரூப் சாட் செய்வது இனிமையான அனுபவம்.

வெர்ச்சுவல் வாழ்த்து அட்டைகள் (Virtual Greeting Cards)

பண்டிகை காலத்தில் வாழ்த்து அட்டையின் நான்கு ஓரத்திலும் மஞ்சள் வைத்து உறவினர்களுக்கு போஸ்ட் செய்வது முதல், அட்டையின் நடுவே ரோஜா பூவை வைத்து காதலுக்கு தூதாக அனுப்பியது வரை எல்லாம் வாழ்த்து அட்டையின் உபயம்தான்!. இதுவே கொஞ்சம் பரிணாம வளர்ச்சி அடைந்து பின்னணி இசையுடனும், அனிமேஷன் பொம்மைகளுடன் இணையத்தில் வெர்ச்சுவல் வாழ்த்து அட்டைகள் வலம் வர, ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு தினம் என்று கூறி நமக்கு அன்பானவர்களுக்கு அனுப்பும் காலம் மலையேறி போய்விட்டது.

சங்கிலி இ-மெயில்கள் (Chain mails)

“இதைப் படித்தவுடன், 21 பேருக்கு அனுப்பவும் அல்லது உங்களுக்கு ஏதாவது கெடுதல் நேரும்”, “இதனைப் பத்து பேருக்கு அனுப்பினால் உங்களின் முக்கியமான எண்ணம் ஒன்று நிறைவேறும்” என்று பார்த்தவுடன் நாம் எல்லாரும் ஒருதடவையாவது ஃபார்வர்டு செய்திருப்போம். கழுதை படத்தில் “என்னைப் பார் யோகம் வரும்” என்று எழுதியிருக்கும் அட்டையின் வெர்ச்சுவல் வெர்ஷன் (Virtual Version) தான் இந்த மெயில்கள் என்றாலும், இன்றும் இதுபோன்ற ‘நம்பிக்கை’களைச் சமூக வலைதளங்களில் நாம் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை அல்லவா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x