Published : 13 Dec 2023 08:23 PM
Last Updated : 13 Dec 2023 08:23 PM

AI சூழ் உலகு 14 | செயற்கை நுண்ணறிவு துணையுடன் ஆடைகளை அகற்றும் அதிர்ச்சி!

பிரதிநிதித்துவப் படம்

தொழில்நுட்பம் சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களின் பார்வையையும் டீப்ஃபேக் பெற்றது. அதை எப்படி தடுப்பது என உலக வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை பேச தொடங்கி உள்ளன. இந்தச் சூழலில் அதற்கும் மேலான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது நியூடிஃபை (Nudify). இதற்கெனவே ஏஐ துணை கொண்டு இயங்கும் பிரத்யேக வெப்சைட்டுகள், மொபைல் போன் செயலிகள் குறித்த டாக் அதிகரித்துள்ளது.

இதை சுருக்கமாகவும் எளிதாகவும் சொல்வதென்றால் ‘நெற்றிக்கண்’ படத்தில் சக்கரவர்த்தி பாத்திரத்தில் ரஜினிகாந்த் (தந்தை பாத்திரம்) நடித்த காட்சியை உதாரணமாக சொல்லலாம். அதில் ஒரு காட்சியில் சக்கரவர்த்தியின் நண்பர் கொடுக்கும் நூதன கண் கண்ணாடியை அணிந்து பார்த்தால் எதிரே இருக்கும் நபர்கள் ஆடையின்றி பிறந்த மேனியாக காட்சி அளிப்பார்கள் என சொல்லி இருப்பார்கள். அதை சக்கரவர்த்தியும் அணிந்து பார்ப்பார். அதுபோல Nudify கவனம் பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டில் மட்டும் பிரபல சமூக வலைதளங்களில் இதன் விளம்பரங்கள் 2400 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல். அதன் காரணமாக டிஜிட்டல் சாதன பயனர்களிடையே இது பரவலாக கவனம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

Nudify: சக்கரவர்த்தியின் கண் கண்ணாடியை போலவே கிட்டத்தட்ட இந்த Nudify பயன்பாடு இன்றைய இணைய சமூகத்தினரிடையே பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பெண்களின் ஆடைகளை களையவே இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக எக்ஸ், Reddit போன்ற தளங்களில் இது சார்ந்த விளம்பரங்கள் அதிகம் தென்படுவதாக சமூக வலைதளங்களை ஆய்வு செய்யும் அமெரிக்க நிறுவனமான கிராபிகா தெரிவித்துள்ளது.

இதுவும் ஒருவகையில் டீப்ஃபேக் கன்டென்ட்தான் என்கின்றனர் டெக் வல்லுநர்கள். ஏஐ தொழில்நுட்பத்தின் மேம்பாடு மற்றும் அக்சஸ் காரணமாக ஒரு படத்தில் உள்ள நபரின் ஆடையை களையவும், அந்தக் படத்தை பகிரவும் முடிகிறது. எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இந்த வகை படங்கள் வைரலாக வலம் வருவது வருத்தமே. அதுவும் இது ஏஐ துணை கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை அடையாளம் காண முடியாத வகையில் அசல் படம் போலவே இருப்பதாகவும் தகவல். இந்த வகை மாடல்கள் இலவசமாக கிடைக்கப் பெறுவதும் இதற்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Nudify சமாச்சாரம் போர்னோகிராஃபி சார்ந்து இணையவெளியில் ஆராயும் நபர்களின் கண்களில்தான் அதிகம் தென்படுகிறது.

இது தொடர்பாக கூகுள் மற்றும் Reddit தளங்கள் தங்கள் தரப்பில் விளக்கம் கொடுத்துள்ளன. ஆபாச அல்லது போலியான பாலியல் சார்ந்த கன்டென்ட் சார்ந்த விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை என்றும், இந்த கொள்கையை தகர்க்கும் விளம்பரங்களை அடையாளம் கண்டால் அதனை உடனடியாக தூக்கி விடுவதாகவும் தெரிவித்துள்ளன. சில சமூக வலைதள நிறுவனங்கள் குறிப்பிட்ட கீவேர்ட் சார்ந்த தேடுதலுக்கு தடை விதித்துள்ளன.

ஒரு சில பிரபலங்களை ஆபாசமாக சித்தரிக்கும் போலி படங்கள் நீண்ட நெடுங்காலமாக இணைய வெளியில் உலா வருவதை பலரும் பார்த்திருப்போம். ஆனால், இப்போது அது சாமானியர்களையும் பதம் பார்க்க தொடங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் டீப்ஃபேக் சார்ந்த மென்பொருள் பயன்பாடு அனைவருக்கும் எளிதில் கிட்டுவதுதான்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வரும் Electronic Frontier Foundation எனும் தன்னார்வ நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது. சில நாடுகளில் பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி சென்று வரும் இளைஞர்கள் மத்தியில் இந்த Nudify பயன்பாடு காணப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் போலியாக ஆடையின்றி சித்தரிக்கப்படும் நபருக்கு இது குறித்து தெரிந்திருக்க கூட வாய்ப்பில்லை என சொல்லப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வட கரோலினாவில் குழந்தை மனநல ஆலோசகர் ஒருவர் தனது நோயாளிகளின் புகைப்படங்களில் ஆடைகளை களையும் செயலிகளைப் பயன்படுத்தியதற்காக 40 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். பாலியல் சார்ந்த டீப்ஃபேக் கன்டென்ட் உருவாக்கத்தை தடை செய்யும் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு இது என தகவல்.

Nudify குறித்து எழுத்தாளர் அராத்து: “எந்த டெக்னாலஜி முன்னேற்றம் வந்தாலும் முதலில் அதைப் பயன்படுத்தி சக்கைப் போடு போடுவது செக்ஸ் சம்மந்தப்பட்ட மேட்டர்கள்தான். வெப்சைட் பிரபலமாக ஆரம்பித்த காலங்களில் லெஜிட்டிமேட் வெப்சைட் எல்லாம் டெக்னிக்கலாக டொக்கு வாங்கிக்கொண்டிருக்க , செக்ஸ் வெப்சைட்டுகள், போர்ன் வெப்சைட்டுகள் டெக்னிக்கலாக, லாஜிக்கலாக, இருந்ததைக் கண்டிருக்கிறேன். என் நிறுவனத்துக்கு முதன்முறையாக பாடாவதி வெப்சைட்டை வடிவமைத்துக் காட்டியபோது , நான் ஒரு போர்ன் வெப்சைட்டைதான் உதாரணமாகக் காட்டினேன்.

அவர்கள் தான் டூ தி பாயிண்டாக, கஸ்டமர் செண்ட்ரிக்காக வடிவமைக்கிறார்கள். அவர்கள் சர்வர் டவுன் ஆகாது. பேமெண்ட் கேட் வே ஃபெயிலியர் ஆகாது. வெப்சைட்டில் தேவயான ஆப்ஷனுக்கு அலைய விட மாட்டார்கள். இப்போது அமேசான் மற்றும் இன்ன பிற பிரபல ஷாப்பிங் வெப்சைட்டுகளில் காட்டப்படும் .. you may like this … people bought together ...suggestions எல்லாம் போர்ன் சைட் வடிவமைப்பாளர்களின் அருட்கொடைதான். ஒரு வொர்க்கிங்க் வெப்சைட் வடிவமைக்க வேண்டும் என்றால் இப்போதும் மாடல் போர்ன் வெப்சைட்தான். அதுபோல இப்போது பிரபலமாகி வரும் AI தொழில் நுட்பத்திலும் அவர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். அதுதான் ந்யூடிஃபை.

நீங்கள் யாருடைய புகைப்படத்தை பதிவேற்றினாலும் அவர்களை ஸ்விம் ஸூட் , லிங்கரி அல்லது முழு நிர்வாணமாக மாற்றிக்கொடுக்கும் இணைய தளங்கள் மற்றும் ஆப். இந்த வகை ஆப் தற்போது 2400 % அதிக டவுன்லோடுகளை பெற்றிருக்கிறதாம். உலக மக்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தமானவரை முண்டகட்டையாகப் பார்க்க அலைபாய்கிறார்கள். கற்பனை வளம் குறைவு போல. இதில் ஒரு சின்ன சிக்கல். பெரும்பாலான ஆப் இல் இந்த ஃபெஸிலிட்டி பெண்கள் போட்டோவுக்கு மட்டுமே உள்ளது. ஆண்கள் புகைப்படங்களுக்கு இல்லை.

ஆண்களை முண்டகட்டையாக்கிப் பார்க்கா ஏஐ-க்கே பிடிக்க வில்லையா அல்லது அது ஏ ஐ க்கு சவாலானதா என்று தெரியவில்லை. சில ஃபோரம்களில் பெண்களின் மனக்குமுறலைப் பார்க்க முடிந்தது. இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்பதற்காகவும், இதைப்பற்றி தெரிந்து கொள்வதற்காகவும், மற்றும் ஏஐ-க்கு சவால் விடுவதற்காகவும் நானும் ஒருவரின் போட்டோவை முயன்று பார்த்தேன்.

ஆனால், முண்ட கட்டையாக அல்ல, லிங்கரி ஆப்ஷன் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில், அதுதான் சவால். ரிஸல்ட் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. சும்மா இட்டு ஒட்டி, ஜிக் ஜாக் தான். யார் என்று கேட்கிறீர்களா? சொன்னால் திக் பிரமை அடைந்து விடுவீர்கள். ஜோக்ஸ் அபார்ட்... இது, டீப் ஃபேக் போன்றவற்றுக்கெல்லாம் என்ன விதி என அமெரிக்காவே விழித்துக்கொண்டு இப்போதுதான் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் தோணி துவங்கி ஏதேனும் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். மோடி சாட் ஜிபிடி நிறுவனத்திற்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த அளவு ரியாக்‌ஷனே எனக்கு ஆச்சரியம் தான். இதை எல்லாம் எப்படி எதிர்கொள்ளலாம்?” என தனது ஃபேஸ்புக் பதிவில் எழுத்தாளர் அராத்து தெரிவித்துள்ளார்.

நவநாகரிக உலகில் சமூக வலைதளங்கள் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் தளமாக உள்ளது. அதில் பகிரப்படும் படங்களில் ஆடையை களைவது அதிர்ச்சியளிக்கும் செயல். இதை தடுக்க உலக நாடுகள் கடுமையான சட்ட விதிகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அதுவரை சமூக வலைதள பயனர்கள் உட்பட இணையதள பயனர்கள் கொஞ்சம் விழிப்புடன் செயல்பட வேண்டும். நமது படத்தை அல்லது பதிவுகளை யார் பார்க்கலாம், யார் பார்க்கக்கூடாது போன்றவற்றை கன்ட்ரோல் செய்யலாம். அதன் மூலம் இதிலிருந்து இப்போதைக்கு தப்பிக்கலாம்.

முந்தைய அத்தியாயம்: AI சூழ் உலகு 13 | Deepfake: காண்பதும் கேட்பதும் பொய்... சிம்ரன், மோடி, பைடன் ‘சான்று’!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x