

சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. யுஎஸ்பி-சி டைப் போர்ட் உடன் வெளிவந்துள்ள நிலையில் ஆப்பிளின் முயற்சியை ட்ரோல் செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.
கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன. தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்துள்ளது.
முக்கியமாக ஐபோன்கள் லைட்னிங் சார்ஜிங் போர்ட் உடன் தான் வெளியிடப்படும். அதற்கு ஐபோன் 15-ல் விடை கொடுத்துள்ளது ஆப்பிள். யுஎஸ்பி-சி சார்ஜிங் போர்ட் ஐபோன் 15 போன்களில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஐரோப்பிய யூனியன். கடந்த 2021-ல் விதியை திருத்தி போர்டபிள் எலக்ட்ரானிக் சாதனங்களில் ஒரே வகையிலான யுஎஸ்பி-சி டைப் சார்ஜிங் போர்ட் இருக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்தது. அந்த அழுத்தம் காரணமாக ஆப்பிள் லைட்னிங் போர்ட்க்கு விடை கொடுத்துள்ளது.
இந்த சூழலில் எலெக்ட்ரானிக் சாதன உற்பத்தி நிறுவனமான சாம்சங், ஆப்பிள் ஐபோன்-15 சீரிஸ் போன்களை ட்வீட் மூலம் ட்ரோல் செய்துள்ளது. அந்நிறுவனம் செய்துள்ள ட்வீட்டில், “குறைந்த பட்சம் நாம் ஒரு மாற்றத்தை பார்த்துள்ளது விசித்திரம்” என தெரிவித்துள்ளது.