Published : 15 Dec 2017 11:50 am

Updated : 15 Dec 2017 11:50 am

 

Published : 15 Dec 2017 11:50 AM
Last Updated : 15 Dec 2017 11:50 AM

யூடியூப் கோடீஸ்வரன்!

யூடியூப் நட்சத்திரங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். யூடியூப் கோடீஸ்வரர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இத்தகைய கோடீஸ்வரர்களின் பட்டியலைப் புகழ்பெற்ற பத்திரிகையான போர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் ஓர் இளைஞர்தான். டான் மிடில்டன் எனும் அந்த இளைஞருக்கு 26 வயது.

கடந்த ஆண்டில் அவரது வருமானம் மட்டும் 12.3 மில்லியன் பவுண்ட் (சுமார் 106 கோடி ரூபாய்) என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. இவ்வளவு பணமா என மலைக்காதீர்கள். வாலிபர் டான் இதை எப்படிச் சம்பாதித்தார் எனத் தெரிந்தால், இன்னும் மலைப்பாக இருக்கும்.


இந்தத் தொகை அனைத்தையும் அவர் வீடியோ கேம் விளையாடி சாம்பாதித்திருக்கிறார். வீடியோ கேம் விளையாடுவதன் மூலம் பொழுதைப் போக்கலாம், எப்படிப் பணம் சம்பாதிக்க முடியும் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், வீடியோ கேம் விளையாடுதைத் தொழிலாகக் கொண்ட ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் தீவிர வீடியோ கேம் பிரியர்கள். வீடியோ கேம் விளையாடுவதில் கில்லாடிகள். இந்தத் திறமையைத்தான் வீடியோ பகிர்வுத் தளமான யூடியூப்பில் அரங்கேற்றி காசும் சம்பாதித்து வருகின்றனர்.

அதாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வீடியோ ஆடுவதை வெப் கேமரா மூலம் பதிவு செய்து, அதை யூடியூப்பில் ஒளிபரப்புகிறார்கள். இப்படி ஒளிபரப்பியபடி ஆட்டத்தைத் தொடர்கிறார்கள். அப்படியே கிரிக்கெட் போட்டிக்கான வர்ணனை போல் தங்கள் ஆட்டம் பற்றி சுய வர்ணனையும் செய்கிறார்கள். ஆட்ட நுணுக்கங்களையும் பகிர்கிறார்கள். இதைப் பார்த்து ரசித்து கைதட்டி ஆர்ப்பரிப்போரும் ஆதரவளிப்போரும் யூடியூபில் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். இந்த ஆதரவு மூலமே விளம்பர வருவாய் கொட்டுகிறது. பலருக்கு லட்சங்களில், சிலருக்குக் கோடிகளில்!

வீடியோ கேம் சேனல்

இப்படிக் கோடிகளில் விளம்பர வருவாய் பெறுபவர்களில் டான் மிடில்டனுக்கு முதலிடம். அவரது யூடியூப் சேனலுக்கு 1.6 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். அவரது வீடியோக்கள் மொத்தம் 1,000 கோடி முறைக்கு மேல் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளன. பொதுவாக யூடியூப்பில் 1,000 பார்வைகளுக்கு ஒரு பவுண்டு வருவாய் கிடைக்கும். மிடில்டனின் வீடியோ சேனல் கோடிகளில் பார்வையாளர்களைக் கொண்டிருப்பதால், வருமானமும் அதற்கேற்பக் கொட்டுகிறது.

வீடியோ கேமை யூடியூப்பில் விளையாடி காட்டுவதும், அதை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிப்பதும் உங்களுக்கு அதிசயமாக இருக்கலாம். ஆனால், இதில் வியப்பில்லை. ஏனெனில், வீடியோ கேம் சார்ந்த ரசனையே தனிதான். பலவகையான கேம்கள் பற்றிய தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்து, விவாதிக்கப் பிரத்யேகமான இணையதளங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல; வீடியோ கேம்களுக்குள்ளேயே தனி நகரங்கள் உருவாக்கப்பட்டு, அது ஒரு விசித்திர உலகமாகவும் இருக்கிறது. இவற்றில் பலவகையான கேம்கள் உள்ளன. செகண்ட் லைப், வார் கிராப்ட், கால் ஆப் டியூட்டி, கிரேண்ட் தெப்ட் ஆட்டோ, டெஸ்டைனி, மைன் கிராப்ட் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

டெஸ்டினி விளையாட்டு

இந்த விளையாட்டுகளில் சிலவற்றின்பட்ஜெட் ஹாலிவுட் படங்களையே விஞ்சிவிடுவதும் உண்டு. ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஹாலிவுட் படங்களுக்குச் சவால்விடக்கூடியதாக இருக்கும்.

டெஸ்டைனி விளையாட்டு மனிதர்களுக்கும் ஏலியன்களுக்கும் இடையிலான மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆக, வீடியோ கேம்களுக்கு இத்தனை கிரேஸ் இருக்கும்போது, அவற்றை விளையாடிக் காட்டுவதை ரசிப்பதும் இயல்பே. இந்த இயல்பைப் பயன்படுத்திதான் மிடில்டன் போன்ற கில்லாடிகள் உருவாகின்றனர்.

middletonகில்லாடி மிடில்டன்

மிடில்டன் இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர். கல்லூரி முடித்ததும் இவர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றினார். வீடியோ கேம் பிரியரான மிடில்டன், தனது ஆட்டத் திறமையைப் பகிர்ந்துகொள்ள டிடிஎம் என்ற யூடியூப் சேனலை தொடங்கினார். முதலில் போக்கேமான் விளையாட்டில் கவனம் செலுத்தியவர், பின்னர் மைன்கிராப்ட் விளையாட்டுக்கு மாறினார். மைன்கிராப்ட் என்பது முப்பரிமான டிஜிட்டல் கன சதுரங்களை வைத்துக்கொண்டு நகரங்களையும் வாழ்விடங்களையும் உருவாக்கும் சுவாரசியமான விளையாட்டு. மைன்கிராப்ட்டை ஆடிக்காட்டும் திறனுக்காகத்தான் மிடில்டன்னுக்கு ஒரு கோடிக்கும் மேல் சந்தாதாரர்கள் யூடியூப்பில் கிடைத்தனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். மைன்கிராப்டின் ரசிகர்களும் இந்த வயதினர்தான்.

“ஐந்தாண்டுகளுக்கு முன் யூடியூப்பை யாரும் ஒரு தொழிலாகக் கருதவில்லை, ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. பலரும் யூடியூப்பை ஒரு தொழிலாக மாற்றிக்கொள்ள முற்படுகின்றனர்” என்கிறார் மிடில்டன். அவர் சொல்வது உண்மைதான்.

பலர் காமெடி, அழகுக் கலை சேனல் நடத்தி நட்சத்திரமானவர்கள் என்றால், இன்னும் பலர் மிடில்டனைப் போல வீடியோ கேம் வித்தகர்கள். யூடியூப் சேனல் வைத்துள்ளவர்களுக்கு மிடில்டன் இன்று ஒரு ரோல் மாடல்!


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x