

கலிபோர்னியா: அடுத்த ஆண்டு மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 12-ம் தேதி ஆப்பிள் நிறுவனம் நடத்தும் நிகழ்வில் ஆப்பிள் 15 சீரிஸ் போன்கள் உட்பட பல்வேறு சாதனங்களை அந்நிறுவனம் செய்ய உள்ளது.
உலக மொபைல் போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், லேப்டாப் சந்தையிலும் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் வகையில் மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கூகுள் குரோமுக்கு சவால் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டத்தை ஆப்பிள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் ஆப்பிளின் மேக்புக் ஏர் மற்றும் புரோ மாடல் லேப்டாப்களில் இருந்து முற்றிலும் இந்த மலிவு விலை மேக்புக் மாடல் மாறுபாடு கண்டிருக்கும் எனத் தெரிகிறது. மெட்டல் கேஸிங் தொடங்கி பல்வேறு மெக்கானிக்கல் காம்பனென்ட் மாறுபட்டு இருக்கும் எனத் தெரிகிறது. தற்போது சந்தையில் விற்பனையாகும் ஆப்பிள் லேப்டாப்களின் ஆரம்ப விலை ரூ.99,900. மேக்புக் ஏர் மாடல் இந்த விலையில் கிடைக்கிறது. அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள மலிவு விலை ஆப்பிள் லேப்டாப், ஆப்பிள் 14 பிளஸ் மாடல் விலையை விடவும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் பயனர்கள் மத்தியில் குரோம்புக் பெற்று வரும் பிரசித்தி தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 15 சீரிஸ் வரிசையில் ஐபோன் 15, 15 பிளஸ் மாடல் போன்கள் ஏ16 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. ஐபோன் 15 புரோ மற்றும் 15 புரோ மேக்ஸ் மாடல்களில் ஏ17 பயோனிக் சிப்செட் இடம் பெற்றுள்ளதாகவும், ஐஓஎஸ் 17 இயங்குதளத்தில் இந்த மாடல்கள் இயங்கும் என்றும் தகவல். இந்த போன்கள் ஆப்பிளின் நிகழ்வில் அறிமுகமாகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் இந்த சாதனங்களில் இருக்கும் எனத் தெரிகிறது.
இதோடு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மற்றும் ஐஓஎஸ் இயங்குதள அப்டேட் இந்த நிகழ்வில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி செப்டம்பர் 12-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் இந்நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.