

இந்த ஆண்டு இணையத்தில் கோலோச்சிய மீம்களில் பளிச்சென புன்னகை வர வைக்கிறது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் நீளமான ஆடையின் தாக்கத்தால் உருவான மீம். ‘மெட் கேலா 2017’ எனும் சர்வதேச நிகழ்வில் இந்த ஆடையை அணிந்திருந்தார். பிரியங்கா அசத்தியது ஒரு புறம் இருக்க, நெட்டிசன்கள் களத்தில் இறங்கி, அவரது நீளமான ஆடைக்குப் பலவித சூழல்களில் புதிய பயன்பாட்டை உண்டாகும் மீம்களை உருவாக்கி அசத்தினர்.
வசதிகள் வந்தனம்
இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், வாட்ஸ்அப் உள்ளிட்ட மெசேஜிங் சேவைகள் இந்த ஆண்டு பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்தன. வாட்ஸ்அப் தனது பயனாளிகளுக்கான ஸ்டேட்டஸ் வசதியை அறிமுகம் செய்தது. இதன்மூலம், பயனாளிகள் தங்கள் தொடர்புகள் பார்க்கும் வகையில் ஒளிப்படம் அல்லது வீடியோவைப் பதிவேற்ற முடிந்தது.
ஸ்னாப்சாட் அறிமுகம் செய்த ‘ஸ்டோரீஸ்’ வசதிக்குப் போட்டியாக இது அறிமுகமானதாகக் கூறப்பட்டாலும், பயனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு வாட்ஸ்அப், அனுப்பிய செய்திகளை டெலிட் செய்யும் வசதியையும் அறிமுகம் செய்தது. இன்ஸ்டாகிராம் தன் பங்குக்கு சூப்பர் ஜூம், புக்மார்க் உள்ளிட்ட வசதிகளை அறிமுகம் செய்தது.
சுட்டியின் ஆசை
கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் எனும் கனவு பலருக்கும் இருக்கலாம். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த சோலே எனும் 7 வயதுச் சிறுமிக்கும் இப்படி ஒரு கனவு இருப்பது, அந்தச் சிறுமி கூகுள் தலைவருக்கு வேலை கேட்டு எழுதிய கடிதம் மூலம் தெரிய வந்தது.
சிறுமியின் இந்தக் கோரிக்கை மட்டுமல்ல, இதற்கு மிகவும் பொறுப்பாகப் பதில் அனுப்பிய கூகுள் சி.இ.ஒ. சுந்தர் பிச்சையின் கடிதமும் வைரலாகி சுவாரசியமாக விவாதிக்கப்பட்டது.