ஐ.டி. துறையின் மறுபக்கம்: ஆண்களைவிட பெண்களுக்கு 20% குறைவான ஊதியம்

ஐ.டி. துறையின் மறுபக்கம்: ஆண்களைவிட பெண்களுக்கு 20% குறைவான ஊதியம்
Updated on
1 min read

இந்தியாவின் முன்னணி துறையாக கருதப்படும் ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்களை விடவும் 20% குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்தப் பாகுபாடு, கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு அல்லாத பணி நிலை வகையில் கடைப்பிடிக்கப்படுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கண்காணிப்பு அல்லாத பணி ( non-supervisory) நிலை வகையில், ஓர் ஆணின் மொத்த ஊதியம் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.255.32-ஆக உள்ளது. இதுவே, ஒரு பெண்ணின் மொத்த ஊதியம் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.206.28--ஆக உள்ளது. கண்காணிப்பு பணி நிலை வகையில், ஆணுக்கு ரூ.461.89 மற்றும் பெண்ணிற்கு ரூ.375.29 என வகுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு வலைத்தளமான மான்ஸ்டர் (Monster), ஐஐஎம்-அகமதபாத் மற்றும் பேசேக்.இன் (Paycheck.in) இணையதளம் சேர்ந்து நடத்திய இந்த ஆய்வில், பெண் பணியாளர்கள் ஆண்களைவிட 18-20 சதவீதம் குறைவான ஊதியம் வாங்குவதாக கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்விற்காக, ஐ.டி. துறையில் பணிபுரியும் 2,23,29 பேர்களிடம் பகுத்தாய்வு நடத்தப்பட்டது. இதில், 88% ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கண்காணிப்பு பொறுப்பு பெண்களை விட ஆண்களுக்கு அடிக்கடி வழங்கப்படுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

நைட் ஷிப்ட் இருக்கும் ஐ.டி. பணிக்கு பெண்கள் வர தயங்குவதும், ஒரு பெண் தலைமைக்கு கீழ் ஆண் பணிபுரிய மறுக்கும் ‘சமூக கலாச்சாரமும்’தான் இதற்கு காரணமாக கருதப்படுகிறது.

இதுகுறித்து மான்ஸ்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் மோடி கூறும்போது, “இந்தியாவிலுள்ள பெரும்பாலான துறைகளில் பாலினப் பாகுபாடு பார்ப்பதுடன் பெண்களுக்கு ஆண்களை விட குறைவான ஊதியம் வழங்குவது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in