

இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்புகள் பாகுபலி 2 மற்றும் மெர்சல் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
2017 ஆண்டின் செல்வாக்கான தருணங்கள் என்ற பட்டியலை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ட்விட்டர் பயனர்கள் அதிகம் விவாதித்த விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழில் மெர்சல் படத்துக்கு முதன்முதலாக ட்விட்டர் இமோஜி என்கிற ட்விட்டர் சின்னம் கிடைத்தது. இது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்றும், அதன் மூலம் மூன்று நாட்களில் 1.7 மில்லியன் ட்வீட்டுகள் பதிவேற்றப்பட்டன என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதனால் #Mersal என்ற ஹாஷ்டாக், இந்த வருடத்தின் முதன்மை ஹாஷ்டாக் ட்ரெண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டரை தனது பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் சூர்யா. இது கோல்டன் ட்வீட் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 2017, இந்தியாவில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் இது. மொத்தம் 68,856 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு, தலாக் சர்ச்சை, ஜிஎஸ்டி, குர்மீத் ராம் ரஹீம் கைது, பண மதிப்பு நீக்கம் முதலாண்டு மற்றும் குடியரசு தலைவர் தேர்தல் ஆகியவை பற்றியும் அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி அன்று #TripleTalaq என்ற ஹாஷ்டேக் 3,50,000 ட்வீட்டுகளுடன் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆனது.
விளையாட்டை பொறுத்தவரை ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தான் விளையாடியது பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. #INDvPAK என்ற ஹாஷ்டேக் 1.8 மில்லியன் ட்வீட்டுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐபிஎல் இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் 1 ரன் வெற்றியும் அதிக மக்களை ட்வீட்ட வைத்துள்ளது.#IPL, #ct17, #wwc17 and #indvpak ஆகிய ஹாஷ்டேக்குகள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும், இந்தியாவில் அதிகம் தொடரப்படும் முதல் 10 நபர்கள் பட்டியலில் முதல் முறையாக இணைந்தார்கள்.
பெண்களுக்கான அதிகாரம் பற்றியும் பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளது. மகளிர் உலகக் கோப்பையை தொடர்ந்து #wwc17 மற்றும் #AintNoCinderella ஆகிய ஹாஷ் டேக்குகள் பிரபலமாயின.
ட்விட்டரில் அதிகம் தொடரப்படும் இந்தியர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். மொத்தம் 37.5 மில்லியன் பயனர்கள் அவரைத் தொடர்கின்றனர். இது சென்ற ஆண்டை விட 52 சதவிதம் அதிகமாகும்.
பாலிவுட் நடிகர்களில், ஆமிர்கானை பின் தொடர்பவர்களை விட அக்ஷய்குமாரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகமானது.
- பிரதீப் நாயர், தி இந்து ஆங்கிலம்
தமிழில் கார்த்திக் கிருஷ்ணா