

ட்விட்டர் பதிவுகளில் எழுத்துருக்களின் எல்லையை 140-லிருந்து 280-ஆக அதிகரித்துள்ளது ட்விட்டர்.
இதன்மூலம் ட்விட்டர் பயனாளர்கள் கூடுதலாக தங்களது கருத்துகளை பதிவிட முடியும்.
முன்னதாக, கடந்த பத்தாண்டுகளாக ட்விட்டரில் பதிவிடும் பதிவுகளில் வெறும் 140 எழுத்துருக்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் பயனாளர்கள் தங்களது கருத்தை கூடுதலாக பதிவு செய்ய ட்விட்டரில் ஸ்கிரீன் ஷாட்டைப் (screenshot) பயன்படுத்திவந்தனர். எனினும் நீண்ட நாட்களாக ட்விட்டரில் எழுத்துருக்களின் எல்லையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ட்விட்டர் பயனாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து ட்விட்டர் நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் ட்விட்டரில் எழுதுருக்களின் எல்லை விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது என்று கூறி இருந்தது.
ட்விட்டரில் 280 எழுத்துருக்களை பயன்படுத்தலாம் என்ற புதிய வசதியை இன்று (புதன்கிழமை) ட்விட்டர் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையில் உங்கள் பதிவை நீங்கள் பதிவு செய்யும்போது பதிவின் கீழே உள்ள வட்டம் சிறிது சிறிதாக நீல வண்ணத்தால் நிரப்பப்படுகிறது. நீங்கள் 280 எழுத்துருக்களுக்கு அருகில் சென்றதும் அந்த வட்டம் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
280 எழுத்துருக்களுக்கு மேல் சென்றால் அந்த வட்டம் சிவப்பாக மாறுகிறது. இதற்குத் தகுந்தாற் போல் ட்விட்டர் பயனாளர்கள் தங்களது பதிவை எடிட் செய்து தங்களது கருத்தை பதிவிடலாம்.
எனினும் சீனா, ஜப்பான், கொரிய மொழிகளில் பழைய பயன்பாடே இருக்கும் என்று ட்விட்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டரின் இந்தப் புதிய வசதி அதன் பயனாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.