

தி
ரைப்பட நட்சத்திரங்கள் எந்தப் புத்தகத்தை ஆர்வத்துடன் வாசிக்கின்றனர் என்பதை அவர்கள் பேட்டி மூலம் அறிந்துகொள்ளலாம். ஆனால், சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் வாசித்த புத்தகங்களை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அந்தப் புத்தகங்கள் உங்கள் நினைவில் இருக்கின்றனவா? இந்தக் கேள்விகள் உங்களுக்கு சுவாரசியம் அளித்தால், @புக்ஸ்_இன்_மூவிஸ் (@books_in_movies ) ட்விட்டர் பக்கம் உங்களைக் கவர்ந்திழுக்கும். ஏனெனில், இந்த ட்விட்டர் பக்கம் திரையில் தோன்றி மறைந்த புத்தகங்களைக் குறும்பதிவு செய்துவருகிறது.
திரைப்படங்களில் கதை சொல்லும் உத்தியாகவும், காட்சி அமைப்புக்கு வலுச்சேர்க்கவும் பல விஷயங்கள் பயன்படுத்துவது உண்டு. அந்தவகையில்தான் திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள் புத்தகம் அல்லது நாவலை வாசித்துக்கொண்டிருப்பதுபோல காண்பிப்பதும் வழக்கம். ‘கபாலி’ படத்தின் அறிமுகக் காட்சியில் ரஜினிகாந்த் ‘மை பாதர் பாலைய்யா’ எனும் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பது போன்ற காட்சி கவனத்தை ஈர்த்தது இதற்கான உதாரணம். பாலச்சந்தரின் ‘ஏக் துஜே கேலியே’ படத்தில் நாயகி, ‘ஷேக்ஸ்பியர் நாடகங்கள்’, ‘20 நாட்களில் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வது எப்படி?’ எனும் புத்தகங்களை வாசிப்பதுபோல வரும்.
ஆனால், பெரும்பாலும் ரசிகர்கள் இந்தக் காட்சிகளைக் கடந்து போய்விடுவதுண்டு. அதில் வரும் புத்தகங்களையும் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். திரை வாசிப்பை மையமாககொண்டு ஏதேனும் சர்ச்சை அல்லது விவாதம் ஏற்படும் போதுதான், காட்சிகளில் காண்பிக்கப்படும் புத்தகங்கள் கவனம்பெறும். அவ்வாறு இல்லாமல், திரைப்படங்களில் பாத்திரங்களால் வாசிக்கப்பட்ட புத்தகங்களை எல்லாம் கண்டறிந்து அடையாளம் காட்டும் வகையில் மேலே குறிப்பிட்ட புக்ஸ்_இன்_மூவிஸ் ட்விட்டர் பக்கம் அமைந்துள்ளது. அபிஷேக் சுமன் எனும் திரைப்பட ரசிகர் இந்த ட்விட்டர் பக்கத்தை நடத்தி வருகிறார். திரைப்படங்களில் சினிமாவில் புத்தகம் வாசிப்பதுபோல வரும் காட்சிகளை எல்லாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதன் விவரத்தை குறும்பதிவாகப் பகிர்ந்துவருகிறார். எந்தப் படத்தில், எந்தக் காட்சியில் என்ன புத்தகம் வாசிக்கப்படுகிறது என்பதைக் குறும்பதிவுகள் மூலம் அறியலாம்.
நம்மூர்த் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் சர்வதேசத் திரைப்படங்களில் பாத்திரங்கள் வாசிக்கும் புத்தகங்களையும் இப்படிப் படம் பிடித்துக் காட்டி வருகிறார். டெல்லிவாசியான அபிஷேக் தணிக்கையாளர். சினிமா, புத்தகம் இரண்டிலுமே ஆர்வமுள்ளவர். திரையில் கதாபாத்திரங்கள் வாசிக்கும் புத்தகம் தொடர்பாகப் பத்திரிகை ஒன்றில், சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த கட்டுரை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, திரைப்புத்தகங்களை அடையாளம் காட்டும் ஆர்வம் உண்டானதாக சொல்கிறார் அபிஷேக். முதலில் தனது ட்விட்டர் பக்கத்திலேயே இந்தத் தகவல்களைப் பகிர்ந்து வந்திருக்கிறார். பின்னர்தான் இதற்கென்றே தனி ட்விட்டர் பக்கத்தையும் ஒளிப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் ஒரு பக்கத்தையும் உருவாக்கினார்.
திரையில் தோன்றும் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகவே தினமும் அவர் திரைப்படம் பார்க்கிறாராம். ஏற்கெனவே பார்த்த படங்களில் தோன்றிய புத்தகங்கள் நன்றாக நினைவிலிருந்தது தொடக்கத்தில் இவருக்குக் கைகொடுத்திருக்கிறது. இப்போது இதற்காகவே படங்களைப் பார்க்கிறார். மற்றவர்கள் பரிந்துரையையும் ஏற்றுக்கொள்கிறார். புத்தகங்கள் மட்டுமல்ல பத்திரிகை, இதழ்கள் போன்றவை வாசிக்கப்பட்டாலும் அவற்றையும் பகிர்ந்துகொள்கிறார். இதுவரை நானூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
‘திரைப்படத்தில் எந்த இடத்தில் புத்தகம் வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு நிறுத்திக்கொள்வேன். அந்தப் புத்தகத்துக்கும் காட்சிக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் ஆய்வு செய்வதில்லை. பல படங்களில் புத்தகங்கள் எந்தவித அர்த்தமும் இல்லாமல் காட்சி அமைப்புக்குத் தேவையான ஒரு பொருளாகவே பயன்படுத்தப்படுவதாக” சொல்கிறார் அபிஷேக்.
அபிஷேக்கின் ட்விட்டர் பக்கத்தைப் பின்தொடர்ந்தால் தினம் ஒரு புத்தகம் உங்களுக்கு அறிமுகமாகலாம். புத்தகப் பிரியர்கள் இதைப் புத்தகங்களுக்கான அங்கீகாரமாக கருதலாம். திரைப்படப் பிரியர்கள் அந்த ஆர்வத்தின் அடிப்படையில் புத்தகங்களைத் தேடிச் செல்லலாம். குறும்பதிவு சேவையான ட்விட்டரை எப்படிச் சுவாரசியமாகப் பயன்படுத்தலாம் என்பதற்கான அழகான உதாரணம் இந்தப் பக்கம். இந்தத் தகவல்களை எல்லாம் கொண்ட இணையதளம் ஒன்றை உருவாக்கவும் அபிஷேக் திட்டமிட்டிருக்கிறார்.
ட்விட்டர் பக்கம்: @books_in_movies