

சீன ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் ஒன் ப்ளஸ் 5டி மொபைல்கள், அமேசானில் விற்பனை தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஒன் ப்ளஸ் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் விகாஸ் அகர்வால், ''இந்தியா மற்றும் உலகளாவிய முன் விற்பனையில் (pre-sale) முன்னெப்போதும் இல்லாத வகையில் வாடிக்கையாளர்களின் எதிர்வினையைக் கண்டோம். பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள எங்களது கிளைகளை நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் மொய்த்தனர்.
உலகம் முழுவதும் ஒன் ப்ளஸ் 5டி மொபைல்கள், நவம்பர் 28 அன்று விற்பனையாகும் என்பதைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். ஒன் ப்ளஸ் விற்பனையகங்கள், குறிப்பிட்ட க்ரோமா அங்காடிகள், ஒன் ப்ளஸ் இணையதளம், அமேசான் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதே நாளில் விற்பனை தொடங்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
ஒன் ப்ளஸ் மொபைலின் புதிய தயாரிப்பான 5டி-ன் முன்பக்க கேமராவில் குறைவான வெளிச்சத்திலும் படம் எடுக்கமுடிகிற 'இண்டலிஜெண்ட் பிக்சல்' தொழில்நுட்பம், கடினமான ஒளியையும் தாங்கும் வகையில் 'சன்லைட்' டிஸ்ப்ளே சார்ஜிங், அரை மணி நேரம் சார்ஜ் ஏறினால் நாள் முழுவதும் பயன்படுத்தும் வசதி, 'ஃபேஸ் அன்லாக்' எனப்படும் மொபைலைப் பார்ப்பதன் மூலம் திறக்கும் வசதி ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.