Last Updated : 20 Oct, 2017 11:12 AM

Published : 20 Oct 2017 11:12 AM
Last Updated : 20 Oct 2017 11:12 AM

எல்லையில்லா இணைய வரலாறு!

 

ணையத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? இணையம் நாளுக்குநாள் புதிதாகிக்கொண்டிருக்கும் நிலையில் பழைய கதை எல்லாம் எதற்கு என்று நினைத்தால், உங்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. இணையம் கதைகளால் நிரம்பியிருக்கிறது, அந்தக் கதைகள் சுவாரசியமானவை என்பதுதான் அது.

அது மட்டுல்ல, இணைய வரலாற்றில் அறியாத விஷயங்கள் இத்தனை இருக்கின்றனவா என்கிற வியப்பும் உண்டாகும். இணையத்தின் ஆதிக் கதைகளில் சுவாரசியமான கதை ஒன்றைப் பார்ப்பதற்கு முன் அமெரிக்க புரோகிரமரான ஜே ஹாப்மனை அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், அவர்தான் இணையத்தின் மறக்கப்பட்ட கதைகளை எல்லாம் அகழ்வராய்ச்சி செய்து மீட்டெடுத்து வருபவர்.

ஹாப்மன், ‘தி ஹிஸ்டரி ஆஃப் தி வெப்’ எனும் பெயரில் வலையின் வரலாற்றைப் பதிவு செய்வதற்கான இணையதளத்தை அமைத்திருக்கிறார். அதாவது, வேர்ல்டு வைட் வெப் எனப்படும் வலை உருவான கதைகளை அவர் இந்தத் தளத்தில் வெளியிட்டுவருகிறார்.

வலை கதை

வலையின் வரலாற்றைப் படிக்க நினைப்பவர்கள் ஹாப்மன் தளத்துக்கு விஜயம் செய்ய வேண்டும். பரவலாக அறியப்பட்ட வலையின் தோற்றம், வளர்ச்சி, வெற்றி சார்ந்த தகவல்கள், காலவரிசை விவரங்களை எல்லாம் இதில் பார்க்கலாம். அவர் ஒரு வரலாற்று மாணவராம். படிக்கும் காலத்திலேயே இணையதள உருவாக்கத்தில் பகுதி நேரமாக ஈடுபட்டிருக்கிறார். பின்னர், அதுவே முழு நேரப் பணியாக மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக வலை தொடர்பான கதைகளைப் படித்தவரை அதன் ஆரம்பமும் அடுத்தடுத்து நிகழ்ந்த பாய்ச்சல்களும் வசீகரித்தன. அந்த ஆர்வத்தில் தான் கண்டெடுத்த கதைகளையும் அவற்றுக்கான இணைப்புகளையும் சேகரிக்கத் தொடங்கினார்.

இப்படிப்பட்ட தகவல்களைத் திரட்டித் தொகுத்து வலையின் முழுமையான கால வரிசையை உருவாக்கும் நோக்கத்துடன் இதற்கான இணையதளத்தை அமைத்தார். இணையக் கடலில் தான் தேடிக் கண்டுபிடிக்கும் கதைகளைப் பகிர்ந்துவருகிறார். இணையத்தின் வலை கருக்கொண்ட 1988-ம் ஆண்டு முதல் இந்தக் கதைகளைக் காலவரிசையாகப் படித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் வலையின் முக்கிய நிகழ்வுகளின் பின்னணி சுவாரசியமாக இருப்பதோடு, அதைவிடச் சுவையான வரலாற்றுப் பாடங்களையும் கொண்டிருக்கின்றன.

வந்த கதை

உதாரணமாக ஒரு கதையைப் பார்க்கலாம். வேர்ல்டு வைடு வெப் எனக் குறிப்பிடப்படும் வலையை உருவாக்கியது பிரிட்டனைச் சேர்ந்த டிம் பெர்னர்ஸ் லீ என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஞ்ஞானியான அவர், சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றினார். 1989-ம் ஆண்டில் வலையை உருவாக்குவதற்கான யோசனையை முன்வைத்து, 1991-ல் வலை பிரவுசர் மற்றும் எச்டிஎம்.எல் இணைப்பு வசதி உள்ளிட்ட அம்சங்களோடு உதயமான வரலாற்றையும் அறிந்திருக்கலாம்.

ஆனால், இதற்கான யோசனையை லீ, உலக அளவிலான போன் புத்தகமாக முன்வைத்துதான் வெற்றிபெற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? லீ அப்போது பணியாற்றிய செர்ன் ஆய்வுக்கூடத்தில் இயற்பியல் சார்ந்த ஆய்வு தவிர வேறு விஷயங்களுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால், லீ உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு தகவல்களை எளிதாகப் பகிர்ந்துகொள்வதற்கான வழியை எச்.டிம்.எம்.எல். உள்ளிட்ட அம்சங்களோடு உருவாக்க நினைத்தார். ஆனால், செர்ன் ஆய்வுக்கூடத்தில் இதற்கு அனுமதி கிடைப்பது கடினம்.

நல்லவேளையாக டிம் பெர்னர்ஸ் லீ முன் வைத்த யோசனையை அவரது தலைமை அதிகாரியான மைக் செண்டல் ஆதரித்தார். எனினும், அதிகார மட்டத்தில் அது செல்லுபடியாகாது என அறிந்திருந்த அவர், அதற்கான மாற்று வழியை முன்வைத்தார். இந்த யோசனையை அப்படியே முன்வைக்காமல், செர்ன் ஆய்வுக் கூடத்துக்கு அவசியமான போன் புத்தகத்தை இணையத்தில் உருவாக்கித்தரும் திட்டமாக முன்வைக்குமாறு கூறினார்.

செர்ன் ஆய்வாளர்கள் உலகம் முழுவதும் இருந்ததால், அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கக்கூடிய போன் புத்தகம் தேவைப்பட்டது. அந்தப் போர்வையில் ஐடியாவை வைக்கச் சொன்னார். அதன்படியே இணைய போன் புத்தகத்தை உருவாக்கும் முயற்சியாக வலை தொடங்கி, பின்னர் மெல்ல நிலைப்பெற்றது. இன்று வலையில்லாமல் வாழ்க்கை இல்லை எனச் சொல்லும் நிலையை உருவாக்கும் அளவுக்கு அது வளர்ச்சி பெற்றிருக்கிறது.

இதுபோன்ற வரலாற்றுக் கதைகளை அறிய: https://thehistoryoftheweb.com/

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x