தகவல் புதிது: எல்லாம் ‘சிப்’ மயம்

தகவல் புதிது: எல்லாம் ‘சிப்’ மயம்
Updated on
2 min read

ரயிலில் பயணம் செய்யும்போது, டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட்டை எடுத்துக்காட்டுவதற்குப் பதிலாக கையை மட்டும் நீட்டினால் எப்படி இருக்கும்? டிக்கெட் பரிசோதகரும் தனது ஸ்மார்ட்போனில், நீட்டப்படும் கையை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு புன்னகையோடு நகர்ந்தால் எப்படி இருக்கும்? ஸ்வீடன் நாட்டில் உள்ள ரயிலில் பயணம் செய்தால், இந்த அனுபவத்தைப் பெறலாம்.

அந்நாட்டின் ரயில்வே நிறுவனம், பயணிகள் கைகளில் மைக்ரோசிப்களைப் பொருத்திக்கொண்டு, அதில் டிக்கெட் விபரங்களைப் பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையைச் சரிபார்ப்பது போலவே இந்த டிஜிட்டல் டிக்கெட்டையும் ஸ்மார்ட்போன் மூலம் சரி பார்த்துக்கொள்ளலாம். இந்த ஹைடெக் போக்கு கொஞ்சம் டூமச்சாகத் தோன்றுகிறதா? இத்தகைய சேவை தங்களுக்குத் தேவை என்று பிசினஸ் கிளாஸ் பயணிகள் பலர் வேண்டுகோள் வைத்ததால்தான், இதை அறிமுகம் செய்துள்ளார்களாம்.

ஸ்க்ரீன்ஷாட் சேவை

பல்வேறு காரணங்களுக்காக இணையத்தில் உலவும்போது ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் தேவை ஏற்படலாம். இதற்கு உதவும் சேவைகள் பல இருக்கின்றன. அந்த வகையில் என்போஸ்.கோ தளம் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இதில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியைச் சமர்ப்பித்தால், அதன் ஸ்கிரீன்ஷாட் தோற்றத்தை அளிக்கிறது. மேலும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஆனால், இது கட்டண சேவை. சோதனைக்காக இலவசமாகப் பயன்படுத்தலாம்.

இணையதள முகவரி: https://enpose.co/

விக்கி கட்டுரை சுருக்கங்கள்

விக்கிபீடியாவில் தகவல்களைத் தேடும்போது நீளமான கட்டுரைகளைப் படிக்க கஷ்டமாக இருந்தால், அவற்றின் சுருக்கத்தை மட்டும் படித்துப் பார்க்கும் வசதி இருப்பது பற்றித் தெரியுமா? குறிப்பிட்ட விக்கிபீடியா கட்டுரைக்கான பிரவுசர் முகவரியில், உங்கள் மொழியைக் குறிக்கும் இ.என். எனும் ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக சிம்பிள் எனும் ஆங்கில எழுத்தை டைப் செய்தால் அந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவத்தை வாசிக்கலாம். ஆங்கில மொழிக் கட்டுரைகளுக்கு மட்டுமே இந்த வசதி இருக்கிறது. அதிலும் எல்லா நீளமான கட்டுரைகளுக்கு இந்த வசதி இல்லை.

இன்ஸ்டாகிராமில் சைக்கிள் ஓவியம்

இன்ஸ்டாகிராம் சேவையை ஒளிப்படங்களைப் பகிர்ந்துகொள்ளத்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை; அருமையான ஓவியங்களையும் கோட்டுச் சித்திரங்களையும்கூடப் பயன்படுத்தலாம். அந்த ஓவியங்கள் கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தால், நல்லது. இதற்கான அழகிய உதாரணமாக ஜெர்மனியில் குடியேறிய இந்தியரான அலென் ஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் அமைந்திருக்கிறது. சிறு வயது முதல் சாமானியர்களின் வாகனமாக சைக்கிள் மீது அபிமானம் கொண்டுள்ள ஷா, இந்தியாவில் சைக்கிள் பயன்பாட்டைச் சித்தரிக்கும் காட்சிகளை ஓவியமாக வரைந்து அவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். சைக்கிள் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஷாவின் ஓவியங்கள், இந்தியர்களில் பலருக்கு சைக்கிள் இன்னமும் நெருக்கமாக இருப்பதை கச்சிதமாக உணர்த்துகின்றன.

இன்ஸ்டாகிராம் பக்கம்: https://www.instagram.com/theolddrifter/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in