

ஒரு இந்தியர் சராசரியாக 3 மணி நேரம் 18 நிமிடங்கள் ஸ்மார்ட்போனில் செலவிடுகிறார்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் அதில் மூழ்கி விடுவதாகவும், சராசரியாக 3 மணி நேரம் 18 நிமிடங்கள் ஸ்மார்ட்போனில் செலவிடுவதாகவும் செல்போன் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான் எரிக்சன் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், 3 மணி நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தில் அப்ளிகேஷன்களில் (ஆப்ஸ்) செலவிடுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
அமெரிக்காவை விட அதிகம்:
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படும் நேரம் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது சற்று அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில், சராசரியாக ஒருவர் 2 மணி நேரம் 12 நிமிடங்களுக்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார்.
ஒரு சில ஆசிய நாடுகளில் ஸ்மார்ட் போன் பயன்பாடு நேரம் 40 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்கள் வரை இருக்கிறது என எரிக்சன் இந்தியா நிறுவன துணைத் தலைவர் ( கொள்கை மற்றும் மார்கெட்டிங்) அஜய் குப்தா தெரிவித்துள்ளார்.
எரிக்சன் கன்ஸ்யூமர் லேப் மேற்கொண்ட ஆய்வில் இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வு இந்தியாவின் 18 நகரங்களில் சுமார் 4000 ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர் சராசரியாக தனது போனை ஒரு நாளைக்கு 77 முறை சோதனை செய்கிறார் என்பது தெரியவந்துள்ளது. சிலர் 100 முறையும் சோதனை செய்கின்றனராம்.
சமூக வலைத்தளங்கள் பார்ப்பது, ஆப்ஸ் பயன்பாடு என்பதைத் தாண்டியும் ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு தற்போது விரிந்துள்ளது என்கிறது இந்த ஆய்வு. தொழிலதிபர்கள் சிலர், தாங்கள் வீ சேட் (WeChat), வாட்ஸ் அப் (WhatsApp) போன்றவற்றை தொழில் நிமித்தமாகவும் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். வேலை பார்ப்பவர்கள் பலர், வேலை நேரத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்காக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.
இது தவிர ஸ்மார்ட்போனில் வீடியோக்களை பார்க்கும் பழக்கமும் கணிசமாக அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்களில் 25% பேர் பின்னிரவில் தங்களது ஸ்மார்ட்போனில் வீடியோ பார்ப்பதாகவும், 23% பேர் பயணத்தின் போது ஸ்மார்ட் போனில் வீடியோ பார்ப்பதாகவும், 20% பேர் ஷாப்பிங் செய்யும் போது வீடியோக்களை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இணையச் சேவை தரம் உயர்ந்துள்ளது, ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதேபோல் மொபைல் பிராட்பேண்ட் பயன்பாடு வீடுகளில் இருக்கும் போதே ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களால் அதிகம் பயன்படுத்துகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.