Last Updated : 27 Oct, 2017 12:06 PM

 

Published : 27 Oct 2017 12:06 PM
Last Updated : 27 Oct 2017 12:06 PM

இளமை.நெட்: இணையப் பாதுகாப்புக்கு பக்கா பரிசோதனைகள்!

னிப்பட்ட தகவல்களைத் திருடும் அடையாளத் திருட்டில் தொடங்கி, மால்வேர் வைரஸ் தாக்குதல், கிரெடிட் கார்டு மோசடி, பாஸ்வேர்டு திருட்டு எனப் பலவிதங்களில் ஆன்லைனில் கள்வர்களும் விஷமிகளும் வலைவிரித்துக் காத்திருக்கின்றனர். எனவே, இணையத்தில் உலவும்போது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள முன்னெச்சரிக்கை அவசியம். அந்த வகையில் இணையப் பாதுகாப்புக்காக நெட்டிசன்கள் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன?

அப்டேட் தேவை

ஸ்மார்ட்போனிலோ கம்ப்யூட்டரிலோ மென்பொருள் அல்லது செயலிகளை அப்டேட் செய்யுங்கள் என நோட்டிபிகேஷன் வரும்போது, உடனே அப்டேட் செய்வதற்குப் பதில் பின்னர் நினைவூட்டவும் எனும் வாய்ப்பை கிளிக் செய்துவிட்டு கடந்து போவதுதான் பலரது வழக்கம். ஆனால், மென்பொருள்களுக்கான அப்டேட்களை நிறைவேற்றுவது மிகவும் முக்கியம். இயங்குதளம் உள்ளிட்ட மென்பொருள்களில் குறிப்பிட்ட குறை அல்லது ஓட்டைகளைக் கண்டறியும்போது அதற்கான பாதுகாப்பு உருவாக்கப்படுகிறது. மென்பொருள் உலகில் இதை செக்யூரிட்டி பேட்ச் என்கிறார்கள். இந்த மென்பொருள் ஒட்டுவேலைக்கான நினைவூட்டல்தான் அப்டேட் கோரிக்கை. எனவே, இதில் அலட்சியம் வேண்டாம். சில மாதங்களுக்கு முன்பு ரான்சம்வேர் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதற்குப் பல பயனாளிகள் விண்டோஸ் இயங்குதளத்துக்கான அப்டேட்களை நிறுவாமல் விட்டதுதான் காரணம்.

பாஸ்வேர்டு பலம்

பலவீனமான பாஸ்வேர்டைவிட இணைய பாதுகாப்புக்கான வில்லங்கம் வேறில்லை. இமெயில் முகவரி, வங்கி சேவைக்கான இணையக் கணக்கு போன்றவற்றுக்கான பாஸ்வேர்டு பலமாக இருக்கிறதா எனச் சோதியுங்கள். தேவையெனில், குறிப்பிட்ட இடைவெளியில் பாஸ்வேர்டை மாற்றுங்கள். குறிப்பாக, பெரிய அளவில் இமெயில் முகவரிகள் திருடப்பட்டது தொடர்பாக ஹேக்கர்களின் கைவரிசை பற்றிய செய்திகள் வெளியாகும்போது உங்கள் பாஸ்வேர்டுகள் மீது ஒரு கண் வைத்திருங்கள். பாஸ்வேர்டு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதா என அடையாளம் காட்டும் ‘ஹேவ் ஐ பி பாண்ட்’ (https://haveibeenpwned.com/) போன்ற இணைய சேவைகளில் உங்கள் இமெயில் முகவரியை சமர்ப்பித்து அதன் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளலாம்.

பிரைவசி பூட்டு

சமூக ஊடகத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் காட்டும் ஆர்வத்தைப் பலரும் அந்தத் தகவல்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படும் என்பதில் உள்ள அபாயத்தை அறிவதில்லை. பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளும் தனிப்பட்ட தகவல்கள் ஒருவரைப் பற்றிப் பலவித செய்திகளை உணர்த்தவல்லவை. இதன் மூலம் விளம்பர வலையும் விரிக்கலாம், மோசடி வலையும் விரிக்கலாம். எனவே, சமூக ஊடகங்களில் பகிரும் தனிப்பட்ட தகவல்கள் குறித்துக் கவனமாக இருங்கள். ஃபேஸ்புக் உள்ளிட்ட பல சேவைகள், தனிப்பட்ட தகவல்களுக்கான பலவகை பிரைவசி பாதுகாப்பு அம்சங்களை அளிக்கின்றன. இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டைம்லைன் மற்றும் டேகிங் வசதியையும் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

செயலி அனுமதி

ஸ்மார்ட்போனில் புதிய செயலிகளை நிறுவும்போது அவை சொல்லும் நிபந்தனைகளுக்கு அனுமதி கொடுத்துவிடுகிறோம். ஆனால், எந்தச் செயலிகள் எந்த வகையான தகவல்களைச் சேகரித்து அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றன என்பது நமக்குத் தெரியாது. சில வில்லங்கச் செயலிகள் நமது தகவல்களைத் தவறான நோக்கில் பயன்படுத்தலாம். எனவே, எந்தச் செயலிக்கு என்ன வகையான அனுமதியை அளித்திருக்கிறோம், அவை தேவையா எனப் பரிசீலிப்பது அவசியம். செட்டிங்ஸ் பகுதியில் உள்ள பிரைவசி வாய்ப்பை கிளிக் செய்து இது பற்றிப் பார்வையிடலாம்.

பிசியைக் கவனியுங்கள்

உங்கள் கம்ப்யூட்டரில் என்னென்ன செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதைக் கவனிப்பதும் அவசியமே. விண்டோசில் டாஸ்க் மேனஜரில் சென்றுபார்த்தால், கம்ப்யூட்டர் பின்னணியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் செயலிகளைப் பார்வையிடலாம். அவற்றில் எதுவும் சந்தேகத்துக்கு உரியதாக இல்லாதவரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

மால்வேர் ஸ்கேன்

உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் அறியாமலேயே மால்வேர்கள் அழையா விருந்தாளியாக வந்துவிடலாம். இமெயில் இணைப்புகளை கிளிக் செய்வதால் அல்லது வில்லங்க விளம்பரப் பக்கம் போவதால் மால்வேர்கள் ஊடுருவலாம். பொதுவாக வைரஸ் தடுப்பு மென்பொருள் இருந்தால், இவற்றை விரட்டிவிடலாம். இருந்தாலும் அவ்வப்போது மால்வேர் கண்டறியும் மென்பொருளைப் பயன்படுத்தி பரிசோதிப்பது நல்லது.

கணக்கைக் கவனி

பல இணைய சேவைகளை கூகுள் அல்லது ஃபேஸ்புக் லாகின் மூலம் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வசதி எளிதாக இருந்தாலும், அந்த மூன்றாம் தரப்பு இணையதளங்கள் இந்த அனுமதியை எப்படிப் பயன்படுத்துகின்றன என்பது தெரியாது. எனவே, எந்தத் தளங்களுக்கு எல்லாம் அனுமதி கொடுத்திருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி பார்த்துக்கொள்வது நல்லது. ஜிமெயிலில் மை அக்கவுண்ட் பக்கத்தில் இது பற்றிப் பார்வையிடலாம்.

இரண்டு அடுக்குப் பாதுகாப்பு

பாஸ்வேர்டு தவிர போனில் அனுப்பி வைக்கப்படும் குறிப்பைக் கொண்ட இரண்டு அடுக்குப் பாதுகாப்பு வசதி எப்போதுமே சிறந்தது. எந்தத் தளங்களில் எல்லாம் இந்த வசதியைப் பயன்படுத்த முடியுமோ அவற்றில் எல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலும் முக்கிய சேவைகள் எனில், நிச்சயம் 2 அடுக்குப் பாதுகாப்பு தேவை. உங்கள் இணையக் கணக்குகளை வேறு யாரேனும் பயன்படுத்தியிருக்கின்றனரா எனச் சோதிப்பதும் உங்கள் வைஃபை வசதியை வேறு நபர்கள் பயன்படுத்துகின்றனரா என்பதைச் சரி பார்த்துக்கொள்வதும் அவசியம்.

தளம் புதிது: முன்னணி வலைப்பதிவுகள்

மீடியம் வலைப்பதிவு சேவையைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். வெறும் வலைப்பதிவு சேவையாக மட்டுமல்லாமல் சமூகப் பகிர்வு வசதி இணைந்த பதிப்பு மேடையாகவும் இது விளங்குகிறது. மென்பொருளாளர்கள் உள்ளிட்ட முன்னணி நபர்கள் இந்தச் சேவை மூலம் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். மீடியம் சேவையில் ஆழமான பதிவுகளையும் படிக்கலாம். மீடியம் சேவையிலேயே பிடித்தமான எழுத்தாளர்களைப் பின்தொடரும் வசதியும் இருக்கிறது.

இணைய முகவரி: https://topmediumstories.com/

தகவல் புதிது: கூகுள் காலண்டரில் புதிய வசதி

நிகழ்ச்சி நிரல் ஏற்பாடு, திட்டமிடலில் கைகொடுக்கும் கூகுள் காலண்டர் சேவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2011-ல் அறிமுகமான இந்தச் சேவை தற்போது புதிய வடிவமைப்பையும் புதிய அம்சங்களையும் பெற்றிருக்கிறது. தேதிகளுக்கான பெரிய ஐகான், மேம்பட்ட வண்ணங்கள், நிகழ்ச்சிகளுக்கான தெளிவான பெட்டி என இந்த வடிவமைப்பு நேர்த்தியாக உள்ளது. ஸ்பிரெட்ஷீட்கள், கோப்புகளுக்கான இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சந்திப்பு ஏற்பாடுகள் தொடர்பான கூடுதல் தகவல்களைப் பார்வையிடுவது, நாட்காட்டியை எளிதாகப் பகிந்துகொள்வது ஆகிய வசதிகளும் உள்ளன.

மேலும் தகவல்களுக்கு; http://bit.ly/2yL2rja

வீடியோ புதிது: புன்னகைக் குறிப்புகள்

கேமராவைக் கையில் எடுத்தாலே ஸ்மைல் பிளீஸ் என்று சொல்வதுதான் நம்முடைய வழக்கம். ஆனால், போஸ் கொடுப்பவர் இயல்பாகச் சிரிப்பதும் முக்கியம். பல நேரம் கொஞ்சம் சிரியுங்களேன் என்று கூறியதுமே பலருக்குச் சிரிப்பே சிக்கலாகிவிடும். கொஞ்சம் கூடுதலாகச் சிரிக்கலாம் அல்லது உம்மென்று இருக்கலாம். இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகப் படமெடுப்பவரை இயற்கையாகச் சிரிக்க வைப்பதற்கான ஏழு எளிய வழிகளை ஒளிப்படக் கலைஞர் மேத்யூ ஸ்டெர்ன் யூடியூப் வீடியோ ஒன்றில் அழகாக விளக்கியுள்ளார். இந்தக் குறிப்புகள் சுவாரசியமாக உள்ளன.

வீடியோவைக் காண: https://www.youtube.com/channel/UCYX22a35sKhA0T6ee7uZfvg

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x