சென்னை: சிறுவர்களை சித்ரவதை செய்த இளைஞர் கைது

சென்னை: சிறுவர்களை சித்ரவதை செய்த இளைஞர் கைது
Updated on: 
1 min read

சென்னை: காசிமேடு பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய 3 சிறுவர்கள் நேற்று முன்தினம் காலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த விக்கி என்பவர், தீபாவளிக்காக பட்டாசு, வாட்ச் வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களை சென்ட்ரல் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்குள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கிய அவர், சிறுவர்களை பல்வேறு வகைகளில் துன்புறுத்தி உள்ளார். குளிக்கும்போது முதுகு தேய்த்துவிடவும், மசாஜ் செய்யவும் வற்புறுத்தியதாக தெரிகிறது.

மேலும், சிறுவர்களை மது குடிக்க வைத்ததுடன், சிகரெட் புகைக்கவும் வற்புறுத்தியுள்ளார். அவர்கள் மறுத்ததால் நெஞ்சில் சிகரெட்டால் சூடுவைத்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சிறுவர்கள் அடம் பிடித்ததால், இரவு நேரத்தில் வீட்டின் அருகே அவர்களை விட்டுச் சென்றுள்ளார். பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், சம்பவப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை காசிமேடு போலீஸார் ஆய்வு செய்தனர்.

சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டது உறுதியானதால், விக்கியை கைது செய்தனர். சிறுவர்களை எதற்காக ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சிறுவர்களை சித்ரவதை செய்த இளைஞர் கைது
தமிழகம் முழுவதும் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்: கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

X