

சென்னை: “அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால், என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்மாக தெரிவித்துக் கொள்கிறேன்” என நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மன்னிப்புக் கோரினார்.
இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதில்லை. நானும் அவ்வாறு பேசியதில்லை. அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. அது குறித்து எங்கள் கட்சியின் அகில இந்திய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் என்னிடம் பேசினார். நேற்று முன்னாள் தலைவர் அண்ணாமலையின் வீட்டுக்குச் சென்றபோது இந்த விவகாரம் குறித்து பேசினார்.
உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால், என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்மாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்
முன்னதாக இன்று நயினார் நாகேந்திரனின் பேச்சு குறித்து நடிகை த்ரிஷாவின் தரப்பில் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், ‘ மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்தை வெளியிடுவார் என்று எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்திருக்கவில்லை என்பதையும், அவ்வாறு இருக்கவும் விரும்பவில்லை என்பதையும் மிகத் தெளிவாகக் கூறுகிறார். மேலும், எனது கட்சிக்காரர் கடந்த காலங்களில் இருந்தது போலவே, அரசியலில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு விஜய் - திரிஷா குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் சலசலப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.