“தமிழக மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் இரு அரசாணைகளை திரும்பப் பெறுக” - பெ.சண்முகம்

 பெ.சண்முகம்

பெ.சண்முகம்

Updated on
1 min read

சென்னை: ‘தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைக்கும் இரண்டு அரசாணைகளையும் அரசு திரும்பப் பெற்று செவிலியர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கும், செவிலியர் ஆசிரியர்களையும் நிரந்தர பணியாளர்களாக்குவதற்கும் உரிய உத்தரவு வழங்க வேண்டும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான 7 செவிலியர் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை கடந்த 16.9.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செவிலியர் கல்லூரிகளில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய மையங்களில் உள்ள செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை ஒன்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி உள்ளார்.

அந்த வழிகாட்டுதல் நெறிமுறையில் செவிலியர் கல்லூரிகளில் உருவாக்கப்படும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் கண்டிப்பாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும், நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை என்பதையும், அரசாங்கத்திற்கு ஓய்வூதியம் அல்லது வேறு எந்தத் தொடர் பொறுப்புகளும் இதனால் ஏற்படாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னரே செவிலியர் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அரசு பணியில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் நிரந்தரம் செய்வோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானதாகும். அதேபோன்று படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் செவிலியர்களும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் 11.09.2026 அன்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவையெல்லாம் படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களை அதிலும் குறிப்பாக பெண்களை அத்த கூலிக்கு தான் அமர்த்துவேன் என்று சொல்வதாகும். அதேபோன்று, இந்தியாவில் மிகச்சிறந்த கட்டமைப்புகளில் ஒன்றாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைப்பதாகும். இது சாதாரண ஏழை எளிய மக்களின் அரசு மருத்துவமனை பயன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும்.

எனவே, மேற்கண்ட இரண்டு அரசாணைகளையும் அரசு திரும்பப்பெற்று செவிலியர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கும், செவிலியர் ஆசிரியர்களையும் நிரந்தர பணியாளர்களாக்குவதற்கும் உரிய உத்தரவு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p> பெ.சண்முகம்</p></div>
“மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது” - அமைச்சர் வன்னி அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in