

கோவை: கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தைப்பூச விழாவில் பங்கேற்பாரா என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் டிச. 20–ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், 'எந்த மதங்கள் சார்ந்தும், எந்த பாகுபாடும் இல்லாமல் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். திருப்பணி செய்கிறோம். இது சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என்று பலர் யோசிக்கிறார்கள்' என கூறியுள்ளார்.
மதங்களுக்கு இடையே பாகுபாடு பார்ப்பதும், மத உணர்வுகளைத் தூண்டி வாக்கு அறுவடை செய்வதும் திமுக என்பது தான் கடந்த கால வரலாறு. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறோம். ஆனால், அவர் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் பங்கேற்பதில்லை. குறைந்தபட்சம் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட கூறுவதில்லை. இது குறித்து சட்டப்பேரவையில் பேச முயன்றால், சபாநாயகர் அப்பாவு அனுமதிப்பதில்லை. இந்நடவடிக்கை மதங்களுக்கு இடையிலான பாகுபாடு இல்லையா? வரும் பிப்ரவரி 1-ம் தேதி தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகப் பெருமானின் தைப்பூசம் வருகிறது. அந்த விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் தயாரா?
இந்து கோயில்களுக்கு திருப்பணி செய்வது திமுகவோ, திமுக அரசோ அல்ல. இந்துக்களின் காணிக்கையில், நன்கொடையில் தான் திருப்பணிகள் நடக்கின்றன.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்தாமல் அராஜகத்தில் ஈடுபட்டது திமுக அரசு. தமிழ்நாட்டின் அமைதியை சீ்ர்குலைக்க நினைப்பது திமுக அரசு தான். கிறிஸ்துமஸ் விழாவில் இயேசு கிறிஸ்துவின் அன்பை, அவரது போதனைகளை பேசாமல், மத மோதலை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.