

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செவிலியர் மேம்பாட்டுச் சங்க மாநில துணைத் தலைவர் சி.கா.சுஜாதா.
மதுரை: தாய்மாமன் சீர் வழங்கும் முதல்வர் விஜய், தனது தங்கைகளுக்கு நிரந்தர பணி வழங்குவாரா என, செவிலியர்கள் எதிர்பார்த்துள்ளனர். மதுரையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்க கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சி.கா.சுஜாதா செய்தியா ளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 5,000 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்களை அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரந்தரப் பணியிடங்களாக நிரப்ப வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
செவிலியர்களுக்கு நிரந்தர பணியிடங்களை உருவாக்கு வோம் என தவெக அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு மாறாக சுமார் 4,200 செவிலியர்களை 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப் படையில் நியமிப்பதற்கான அரசாணையை வெளியிட் டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
முதல்வர் விஜய் ஆட்சிக்கு வரவேண்டும் என மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த செவிலியர்கள், தங்கள் அண்ணன் நல்லது செய்வார் என எதிர்பார்த்து காத்திருந்தோம்.
ஆனால், அரசின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது.எனவே, தாய்மாமன் சீர் வழங்க மதுரை வரும் முதல்வர் விஜய்யை அண்ணனாக பார்க்கும் செவிலியர் தங்கை, தம்பிகளுக்கு, செவிலியர் காலிப் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவார் என்ற நம்பிக் கையுடன் காத்திருக்கிறோம் என அவர் கூறினார்.
மாவட்டத் தலைவர் வி.பிரேம லதா, மாவட்டச் செயலாளர் எம். தாமரைச்செல்வி, மாவட்டப் பொருளாளர் எல்.சகாய டெய்சி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ராஜி உள்பட பலர் உடனிருந்தனர்.