

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார். கடந்த 8-ம் தேதி தனது பகுதி பிரச்சினை தொடர்பாக முறையிடுவதற்காக சென்ற இவரை, துறையூர் தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான ரவி சங்கர் தாக்கியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கார்த்திக்குமார் புகார் அளித்திருந்தார். விசாரணைக்காக கார்த்திக் குமார், தனது வழக்கறிஞர் பொன் முருகேசனுடன் நேற்று திருச்சி ஏடிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜராக வந்தார். அப்போது ஏடிஎஸ்பி இல்லாததால், விசாரணை நடைபெறவில்லை. பின்னர் இதுதொடர்பாக கார்த்திக் குமாரின் வழக்கறிஞர் பொன் முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். உரிய நடவடிக்கை இல்லாத பட்சத்தில் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.