புதுச்சேரி நகரெங்கும் மோசமான நிலையில் உள்ள மின் கம்பங்களை அரசு சீர் செய்யுமா?

பேரிடர் மேலாண்மை ஆணைய உத்தரவு என்ன ஆனது?
புதுச்சேரி நகரெங்கும் மோசமான நிலையில் உள்ள மின் கம்பங்களை அரசு சீர் செய்யுமா?
Updated on: 
2 min read

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரைச்சாலையில், கடந்த ஞாயிறன்று துருப்பிடித்த மின் கம்பம் ஒன்று சரிந்து விழுந்ததில், அதன் அருகில் நின்றிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த பைசல் (7) என்ற சிறுவன் உயிரிழந்தான்.

மின்கம்பம் துருபிடித்தும், முறையாக பராமரிக்கப்படாததும் அதிகாரிகளின் அலட்சியமும்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

ஒதியன்சாலை போலீஸார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 106(1)ல் அதாவது அலட்சியத்தால் ஏற்படும் மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறுவன் உயிரிழப்பிற்கு காரணமான, கடற்கரைச் சாலை அலங்கார விளக்கு மின் கம்பம் கம்பங்கள் 2012-ல் நிறுவப்பட்டது.

அப்போது, இது போல 63 அலங்கார விளக்கு மின் கம்பங்கள் நிறுவப் பட்டன. பொதுவாக, இத்தகைய கம்பங்களின் ஆயுட்காலம் சுமார் 10 ஆண்டுகள் ஆகும்.

சுட்டிக்காட்டிய பிறகும்..

புதுச்சேரி கடற்கரைச் சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களின் மோசமான நிலை குறித்து செய்திகள் பல வெளியாயின. கடற்கரைப் பகுதி மற்றும் நகரின் பிற பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருப் பதை அரசுக்கு பலரும் சுட்டிகாட்டினர்.

சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரி, சமூக ஆர்வலர் ஒருவர் புதுச்சேரி மாவட்டப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அணுகியிருந்தார்.

"இந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய பேரிடர் மேலாண்மை ஆணையம் மின்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆணையத்தின் உத்தரவை மின் துறை தீவிரமாகக் கருதியிருந்தால், அந்தச் சிறுவனின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

அண்மையில், சில நாட்களுக்கு முன்பு, '100 அடி சாலை'யில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பம் ஒன்று சாலையை நோக்கிச் சாய்ந்து, மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. அதேபோல் கிழக்கு கடற்கரைச் சாலையிலும் சம்பவங்கள் நடந்தன.

இதையடுத்து புதுச்சேரிப் பகுதியில் உள்ள ஆபத்தான நிலையில் உள்ள அனைத்து மின் கம்பங்களையும் விரிவாக ஆய்வு செய்ய ஒரு வாரத்துக்கு முன்பு மின் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

முக்கியச் சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட துறைகளின் கடும் அலட்சியமே குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது" என்று அந்த ஆர்வலர் தெரிவிக்கிறார்.

இதற்கிடையே, புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் தலைவர் பாலா இப்பிரச்சினை தொடர்பாக துணைநிலை ஆளுநரிடம் நேற்று மனு ஒன்றை அளித்தார். அதில், “புதுச்சேரியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மின் கம்பங் களையும் தணிக்கை செய்ய வேண்டும்.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்ட போதிலும், மின் கம்பங்களின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, மின் ஒயர்களும் ஆபத்தான முறையில் செல்கின்றன. பருவமழைக்கு முன் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரைச் சாலை மற்றும் ஒயிட் டவுன் பகுதிகளில் சுமார் 110 அலங்காரக் கம்பங்களை மாற்றி அமைப்பதற்காக, உள்ளாட்சித் துறை மூலம் ரூ. 6.38 கோடி மதிப்பீட்டில் புதிய ஒப்பந்தப்புள்ளிகோரப்பட்டுள்ளது.

தட்டாட்டஞ்சாவடி இடைத்தேர்தலுக் குப் பிறகு இந்த ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதை பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி நகரெங்கும் மோசமான நிலையில் உள்ள மின் கம்பங்களை அரசு சீர் செய்யுமா?
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதைவிட மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கியம்: நாராயணன் திருப்பதி கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in