

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்கள், ஊட்டி வட்டத்தின் நடுவட்டம், மசினகுடி பகுதிகளை உள்ளடக்கியது கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி. பொது தொகுதியாக இருந்த இந்த தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
சுற்றுலாவுக்கு போதுமான வாய்ப்பு இல்லாத நிலையில், இங்கு விவசாயமே பிரதான தொழில். தேயிலை, காபி, வாழை, குறுமிளகு, பாக்கு, நெல், ஏலக்காய் என பொன் விளையும் பூமியாக கருதப்படுகிறது.
கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையில் இந்த சட்டப்பேரவை தொகுதி அமைந்துள்ளதால், இங்குள்ளவர்கள் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு அந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர்.
இங்கு தாயகம் திரும்பிய தமிழர்கள், பழங்குடியினர், இஸ்லாமியர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட மக்கள் வசிக்கின்றனர்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரிவு 17 நிலப் பிரச்சினை, தனியார் காடுகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் மனித - விலங்கு மோதல் பிரச்சினைகள் பிரதானமாக உள்ளன.
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான நிலங்கள் பிரிவு 17 வகை நிலங்களாகும். இந்த நிலங்கள் வகைப்படுத்தப்படாததால், இந்த நிலங்களில் வசிப்பவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம் கிடைப்பதில் சிரமம்உள்ளது. 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புக்காக விண்ணப்பித்தும், இது வரை மின் இணைப்பு கிடைக்கவில்லை.
நிலங்கள் வகைப்படுத்தப்படாததால் வனப்பகுதி பல பிரிவுகளாக சிதறியுள்ளது. இதனால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதால் மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் யானை உள்ளிட்ட விலங்குகள் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
பிரிவு 17 வகை நிலப்பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 34,986 ஏக்கர் நிலத்தில் சுமார் 3,476 ஏக்கர் நிலத்தில் மட்டுமே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த பகுதியை வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலமாக அறிவித்து, மக்களை குடியேற்றம் செய்ய அனுமதி வேண்டியும், மீதமுள்ள 81,510 ஏக்கர் நிலத்தை காப்பு காடுகளாக அறிவிக்க அனுமதி வேண்டியும் திமுக அரசு மனு தாக்கல் செய்துள்ளது அப்பகுதி மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட பகுதியில் மசினகுடி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் வணிக ரீதியான வளர்ச்சிப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு முதல் கேரள மாநிலம் நீலம்பூர் வரை கூடலூர் வழியாக ரயில் பாதையை விரிவுபடுத்த வேண்டும். சிறியூர் வழியாக சத்தியமங்கலம் வரை சாலை அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
தொகுதி நிலவரம்
திமுகவின் கோட்டையாக கருதப்படும் கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதி 15 ஆண்டுகளாக திமுக வசமிருந்து, கடந்த முறை அதிமுக கைப்பற்றியது. இந்தத் தொகுதியில் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி கணிசமாக உள்ளது.
அவர்களின் வாக்குகளை பெற்றால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என திமுக நம்புகிறது. மேலும், இம்முறை கூட்டணி பலமும் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. அதிமுக கடந்த ஐந்தாண்டுகளில் கட்சியை தொகுதியில் வளர்த்தெடுத்துள்ளது.
எம்எல்ஏ பொன்.ஜெயசீலன் தொடர்ந்து மக்கள் பேராட்டங்களை கையில் எடுத்து செயல்பட்டதால் அவருக்கு நற்பெயரை தொகுதியில் பெற்று தந்துள்ளது.
மேலும், சிறுபான்மையினர் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளதால் அதிமுகவுக்கு பாதகமான விஷயம். கடந்த தேர்தலில் கோட்டை விட்ட திமுக, இந்த தேர்தலில் அதிமுகவுக்கு கடும் சவாலாக இருக்கும்.
திமுக 6 முறை வெற்றி
1967 முதல் நடைபெற்ற 13 தேர்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும் வென்றுள்ளன.
கடந்த 2021 பேரவைத் தேர்தலில் அதிமுகவின் பொன்.ஜெயசீலன் 1,945 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே திமுக வேட்பாளர் எஸ்.காசிலிங்கத்தை வென்றார்.
தற்போதைய தேர்தலில் திமுக சார்பில் திராவிடமணி மூன்றாம் முறையாக களமிறங்குகிறார். அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ பொன்.ஜெயசீலன் போட்டியிடுகிறார். தீபக் சாய் கிஷோர் (தவெக), ரா.கார்த்திக் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சைகளாக எஸ்.கே.ராஜ், திலகராஜ் ஆகிய 6 பேர் போட்டியிடுகின்றனர்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 89910
பெண் - 95481
3-ம் பாலினத்தவர் - 7
மொத்த வாக்காளர்கள் - 185398