வைகோவை மீண்டும் ராஜ்ய சபாவுக்கு அனுப்புமா திமுக? - எதிர்பார்ப்பில் மதிமுக நிர்வாகிகள்

வைகோ

வைகோ

Updated on
1 min read

கூட்டணியில் திமுக தலைமைக்கு எவ்வித குடைச்சலோ கோரிக்கையோ கொடுக்காத கட்சியாக இப்போதைக்கு மதிமுக மட்டுமே இருக்கிறது. இருந்த போதும் இந்தத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் போட்டியிட்டால் மட்டுமே அங்கீகாரம் பெறமுடியும் என்ற கட்டாயமும் அந்தக் கட்சிக்கு இருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதி நிறைவுக்கு வருகிறது. அந்த இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு ஒரே ஒரு தொகுதி (திருச்சி) மட்டும் ஒதுக்கப்பட்டது. அப்போது வாய்மொழியாக மதிமுக-வுக்கு (குறிப்பாக, வைகோவுக்கு) ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என்று திமுக தரப்பில் பேசப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த முறை மதிமுக-வுக்கு தராமல் அந்த இடத்தை, முன்னர் எழுதிக் கொண்ட ஒப்பந்தப்படி மநீம தலைவர் கமல்ஹாசனுக்குக் கொடுத்துவிட்டது திமுக.

இதையடுத்து வைகோவும் துரை வைகோவும், “எங்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்காதது வருத்தமே” என வெளிப்படையாகவே வருத்தத்தைப் பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த முறையாவது ராஜ்ய சபா சீட் தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மதிமுக உள்ளது. ஆனால், ராஜ்ய சபா சீட் கொடுத்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளைவிட குறைவாகவே மதிமுக-வுக்கு ஒதுக்கப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதிமுக மாநில நிர்வாகிகள் சிலர், ‘‘மதிமுக மாநிலக் கட்சி அந்தஸ்து பெறுவதற்கு சட்டப்பேரவைத் தேர்தலில் 12 தொகுதிகளில் போட்டியிட்டாக வேண்டும் என திமுக-விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் 6 சீட்கள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ராஜ்ய சபா தேர்தல் வருவதால் கடந்த முறை விட்டுப்போன வாய்ப்பு இந்த முறை எங்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

கட்சியா, தலைவர் வைகோவா என்று பார்க்கும் போது தலைவர் வைகோ தான் எங்களுக்குப் பிரதானமாகத் தெரிகிறார். எனவே, எம்எல்ஏ சீட்களை குறைத்துக் கொண்டாலும் கூட பரவாயில்லை. வைகோவை ராஜ்ய சபாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரலாக வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்கவேண்டும் என்பதே எங்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது’’ என்றனர்.

<div class="paragraphs"><p>வைகோ</p></div>
“மாநிலத்தையே அடகு வைத்தவர் பழனிசாமி” - கனிமொழி தாக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in