பல்லடம் தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறுமா அதிமுக?

பல்லடம் தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறுமா அதிமுக?
Updated on
2 min read

திருப்பூர்: பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த 5 முறை நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சி தொடர்ச்சியாக 2-வது ஹாட்ரிக் வெற்றி பெறுமா அல்லது திமுக வேட்பாளர் க.செல்வராஜ் வரலாற்றை மாற்றி எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்காளர்களைக் கொண்டது பல்லடம் தொகுதி. இத்தொகுதியில் 480 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 1,56,069, பெண் வாக்காளர்கள் 1,66,429, மூன்றாம் பாலினத்தவர் 32 பேர் என மொத்தம் 3,22,530 பேர் உள்ளனர்.

இந்தத் தொகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி, கறிக்கோழி பண்ணைகள், சாய ஆலைகள் அதிக அளவில் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடங்கள் மூலமாக நாள்தோறும் ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இதன் மூலமாக நேரடியாக ஒரு லட்சம் பேரும், மறைமுகமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இந்தத் தொகுதியானது பல்லடம் நகராட்சி மற்றும் ஒன்றியம், பொங்கலூர், திருப்பூர் ஒன்றியங்கள், திருப்பூர் மாநகராட்சியின் 10 வார்டுகளையும் உள்ளடக்கிய பெரிய தொகுதியாகும்.

பல்லடம் தொகுதியில் 2001-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 5 தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2001, 2006 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செ.மா.வேலுசாமியும், 2011-ம் ஆண்டில் தற்போதைய அதிமுக வேட்பாளரான கே.பி.பரமசிவமும், 2016-ம் ஆண்டில் நடராஜனும், 2021-ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

விசைத்தறி தொழிலில் முன்னணியில் உள்ள பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில், விசைத்தறி உற்பத்திக்கான நூல் விலை உயர்வு, ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக பல கோடி மதிப்புள்ள ஜவுளித்துணிகள் தேக்கத்தால் உற்பத்தி பாதிப்பு, விசைத்தறிக் கூடங்களுக்கான மின் கட்டண உயர்வு என பல்வேறு பிரச்சினைகளை வாக்காளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட இடுவாய் சின்னக்காளிபாளையத்தில் மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பாக குப்பை கொட்டப்பட்டதால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தது தமிழக அளவில் மிகப்பெரிய தாக்கத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது.

இதன் பின்னர் சில மாதங்கள் கழித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பையை அப்புறப்படுத்தியதுடன், இங்கு குப்பை கொட்டப்படமாட்டாது என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் இடுவாய் ஊராட்சி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் ஆளும் கட்சியின் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதே விவசாயிகள் சங்க நிர்வாகிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

பல்லடம் தொகுதியைப் பொறுத்தவரையில் திமுக சார்பில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரான கே.செல்வராஜ், அதிமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பரமசிவம், நாம் தமிழர் கட்சியி்ல் கே.வி.தமிழ் இனியன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கே.ராம்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தொகுதியில் தொடர்ந்து 2-ஆவது ஹாட்ரிக் வெற்றியை அதிமுக பதிவு செய்யுமா அல்லது கடந்த கால வரலாற்றை திமுக மாற்றி எழுதுமா என்பதே அரசியல் ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

பல்லடம் தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறுமா அதிமுக?
கே.என்.நேரு ‘ஹாட்ரிக்’ சாத்தியமா? - திருச்சி மேற்கு தொகுதி ரவுண்ட்-அப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in