

கூடலூர் தேவர்சோலை பகுதியில் யானை தாக்கியதால் சேதமடைந்த ஆட்டோ.
கூடலூர்: கூடலூர் அருகே இரண்டு ஆட்டோக்களை யானை சேதப்படுத்திய சம்பவத்தில், ஓட்டுநர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோலையைச் சேர்ந்தவர்கள் செயதலுவி (35), மோகன் (38). ஆட்டோ ஓட்டுநர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு கடிசனகொல்லி பழங்குடியினர் கிராமத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, ஆட்டோவில் தேவர்சோலை நோக்கிப் பயணித்தனர். சாலையில் நின்றிருந்த காட்டு யானையைக் கண்டதும், இருவரும் ஆட்டோவை நிறுத்திவிட்டுத் தப்பி ஓடியபோது கீழே விழுந்து காயமடைந்தனர். யானை, செயதலுவியின் ஆட்டோவைப் பள்ளத்தில் தள்ளியது. மேலும், மோகனின் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்துச் சேதப்படுத்தியது.
இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை வனத்துறையினர் சமாதானப்படுத்தி, பொதுமக்கள் உதவியுடன் பள்ளத்தில் விழுந்த ஆட்டோவைக் கயிறு கட்டி மீட்டனர்.
இது குறித்துப் பொதுமக்கள் கூறும்போது, “இப்பகுதியில் நடமாடும் யானை மனிதர்களைத் தாக்கும் ஆபத்து உள்ளதால், அதனைக் கண்காணித்து விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், போராட்டம் நடத்தப்படும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றனர்.
இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, வனத்துறையினர் உறுதியளித்தனர்.