

ராமேசுவரம்: ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் மற்றும் ஊரகப் பகுதிகளில் திங்கட்கிழமை இரவு முதல் இன்று காலை மழை பெய்தது.
இதனால் ராமேசுவரத்தில் உள்ள மீனவர் குடியிருப்புகளாக ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம், மாந்தோப்பு, அம்பேத்கர் நகர், இந்திரா நகர், தங்கச்சிமடம் விக்டோரியா நகர், பாம்பன் சின்னப்பாலம், மண்டபம் கலைஞர் நகர் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் 45.10 மி.மீ, ராமேசுவரம் 40 மி.மீ, பாம்பன் 28.10 மி.மீ, மண்டபத்தில் 26.80 மி.மீ மழை பதிவானது.
மேலும் ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 25 கி.மீ. முதல் 35 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.