

சென்னை: “திருப்புகழ் கமிட்டி அறிக்கையில் உள்ள அனைத்து பரிந்துரைகள் மீதும் நடவடிக்கைகள் எடுத்து, குறிப்புகளை இப்பேரவையில் வைக்க வேண்டும் என்று பணிகளை மேற்கொண்டிருந்த சமயத்தில் தேர்தல் வந்துவிட்டதால் சமர்ப்பிக்க முடியவில்லை” என திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “சென்னை வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் கமிட்டி அறிக்கையை ஏன் பேரவையில் வைக்கவில்லை என சவுமியா அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார்.
திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி 2022-ம் ஆண்டு ஜனவரி 31 அன்று இடைக்கால அறிக்கை தந்தது. 2023 மார்ச் 14 அன்று இறுதி அறிக்கையை தந்தது. அப்போது தலைமைச்செயலாளராக இருந்த இறையன்பு, முதல்வராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னிலையில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், அவசர கால தீர்வு, நீண்ட கால தீர்வு என பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அவசர கால பணிகளை உடனடியாக மேற்கொள்ள அப்போதைய முதல்வர் உத்தரவிட்டார். சென்னை வெள்ளத் தடுப்பு பணிகள் என்ற அடிப்படையில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட திருப்புகழ் கமிட்டி அளித்த 161 இலக்குகள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன.
திருப்புகழ் கமிட்டி அறிக்கையில் உள்ள அனைத்து பரிந்துரைகள் மீதும் நடவடிக்கைகள் எடுத்து, குறிப்புகளை இப்பேரவையில் வைக்க வேண்டும் என்று பணிகளை மேற்கொண்டிருந்த சமயத்தில் தேர்தல் வந்துவிட்டதால் சமர்ப்பிக்க முடியவில்லை. இப்போது நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள், அந்த கமிட்டியின் அறிக்கையை தாராளமாக பேரவையில் சமர்ப்பியுங்கள். மீதமுள்ள பரிந்துரைகளை நீங்கள் முழுவதுமாக நிறைவேற்றுங்கள். நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம்.” என்றார்.