ஜெம் வீரமணி வீட்டு நீச்சல் குளம் அருகே தோண்டி சோதனை நடத்தியது ஏன்? - எஸ்ஐடி விளக்கம்

ஜெம் வீரமணி வீட்டு நீச்சல் குளம் அருகே தோண்டி சோதனை நடத்தியது ஏன்? - எஸ்ஐடி விளக்கம்
Updated on: 
1 min read

சென்னை: சிறுமி புதைக்கப்பட்டுள்ளதாக வீரமணியின் டிரைவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவரது வீட்டில் நீச்சல் குளத்தின் அருகில் தோண்டி சோதனை நடத்தப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியின் மகள் அர்ச்சனா, வெளிநாடுச் செல்லவிருந்த நிலையில், தன்னை விமானத்தில் இருந்து இறங்கச் செய்து, சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் மனித உரிமை மீறல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அர்ச்சனா தரப்பில், உடல் நலம் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் மட்டும் வசிக்கும் வீட்டுக்குள், விசாரணை என்ற பெயரில் நுழைந்த போலீஸார், நீச்சல் குளத்தை இடித்து சேதப்படுத்தியதாகவும், சோதனைக்கு 24 மணிக்கு முன் நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும், சோதனை வீடியோப் பதிவை தங்களுக்கு வழங்க வேண்டும், விசாரணையின்போது, வழக்கறிஞரை உடனிருக்க அனுமதித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பு வழக்கறிஞர், வீரமணியின் வீட்டு நீச்சல் குளம் அருகே சிறுமியின் உடல் புதைக்கப்பட்டதாக அவரது டிரைவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாகவும், பெண்கள் வசிக்கும் பகுதிக்குள் காவல் துறையினர் செல்லவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

மேலும், காவல் துறையினர் விமானத்துக்குள் சென்று அர்ச்சனாவை அழைத்து வரவில்லை. விமான நிலைய ஊழியர்கள்தான் அவரை அழைத்து வந்ததாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து வீரமணியின் வீட்டில் நடந்த சோதனையில் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அது தொடர்பான விவரங்களை பதில் மனுவில் தெரிவிப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அர்ச்சனா மற்றும் அவரது தாயாரை விசாரிப்பதாக இருந்தால், அவர்களது வீட்டுக்கே சென்று விசாரணை நடத்தப்படும் என்று சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இடைப்பட்ட காலத்தில் அர்ச்சனா அல்லது அவரது தாயாரை விசாரிப்பதாக இருந்தால், விசாரணையில் கேட்கப்படும் கேள்விகளை அறிந்துகொள்ள முடியாத தொலைவில் வழக்கறிஞர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெம் வீரமணி வீட்டு நீச்சல் குளம் அருகே தோண்டி சோதனை நடத்தியது ஏன்? - எஸ்ஐடி விளக்கம்
சென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தவெக பிரமுகர்கள் இருவர் கைது

X