ஏன் தேவைப்படுகிறார் ஓபிஎஸ்? - தேர்தல் கணக்குகளும் தேடி வரும் வாய்ப்புகளும்

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

Updated on
2 min read

“துரோகம் செய்த ஓபிஎஸ்ஸுக்கு கட்சிக்குள் இனி வேலை இல்லை” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மீண்டும் ஒருமுறை அழுத்தமாகச் சொல்லிவிட்டாலும் என்டிஏ கூட்டணிக்கு இன்னும் தேவைப்படும் நபராகவே இருக்கிறார் ஓபிஎஸ். காரணம், கடந்த தேர்தலில் படித்துக் கொண்ட பாடம்.

என்டிஏ மட்டுமல்ல... திமுக, தவெக தரப்புகளிலும் ஓபிஎஸ் வருகையை எதிர்பார்த்து சில கணக்குகள் போடப்படுகின்றன. இப்படி மூன்று முக்கிய அணிகளில் இருந்தும் ஓபிஎஸ் வரவை எதிர்பார்க்க என்ன காரணம்?

தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் தங்களின் ஆட்டத்தை குலைப்பவராக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே என்டிஏ கூட்டணி அவரைத் தேடுகிறது. கடந்த தேர்தலில் தென் மாவட்டத்தின் 55 தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டுமே அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது டிடிவி.தினகரன் ஆட்டத்தை குலைப்பவராக இருந்தார். வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு, சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியது உள்ளிட்ட காரணங்களால் இபிஎஸ் மீது கோபத்தில் இருந்த முக்குலத்தோர் சமூகம் தினகரனுக்கு ஆதரவளித்து அதிமுக-வின் வெற்றியை பறித்தது. இப்போது தினகரன் அதிமுக கூட்டணிக்குள் வந்துவிட்டாலும் ஓபிஎஸ் வெளியே நிற்கிறார். இதனால் கடந்த தேர்தலில் எடுத்த அதே நிலைப்பாட்டை முக்குலத்தோர் சமூகம் இம்முறையும் கையில் எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதுபோல் ஓபிஎஸ்ஸை இம்முறை ஆட்டத்தை குலைக்க விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவரை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக இன்னமும் மெனக்கிடுகிறது.

திமுக தரப்பும் ஓபிஎஸ் இந்தப் பக்கம் வந்தால் பலமாக இருக்குமே என்றே கணக்குப் போடுகிறது. என்னதான் தங்கள் கூட்டணி வலுவாக இருப்பதாக திமுக தரப்பில் நம்பினாலும், தவெக வருகையால் பல இடங்களில் தங்களின் வாக்கு சதவீதம் குறையலாம் என்ற பதற்றமும் அந்தக் கட்சிக்கு இருக்கிறது. அதை சரிகட்ட ஓபிஎஸ் போன்ற உதிரிகள் தேவைப்படுகிறார்கள். வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்த்ததன் மூலம் டெல்டாவில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டிருக்கும் திமுக, அதேபோல் ஓபிஎஸ் தங்கள் கட்சிக்கு வந்தால் தென் மாவட்டங்களில் அவரை முன்னிலைப்படுத்தி ஒரு ரவுண்டு வரலாம் என கணிக்கிறது. ஆனால், அதிமுக-வின் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸுக்கு, தன்னை திமுக-வில் இணைத்துக் கொள்வதில் தயக்கம் இருக்கிறது. அது நியாயமும் கூட. அந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு அவரை தனி அணியாக கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ளவும் தயாராகவே இருக்கிறது திமுக.

தவெக-வும் ஓபிஎஸ்ஸை விரும்புகிறது. ஆனால், தனி அணியாக இல்லாமல் தங்களது கட்சிக்குள்ளேயே அவர் வந்துவிட வேண்டும் என்பதே விஜய்யின் விருப்பம் என்கிறார்கள். அப்படி வந்தால், மேற்கு மண்டலத்தை செங்கோட்டையனிடம் ஒப்படைத்தது போல் தென் மண்டலத்தை பெரியவர் ஓபிஎஸ் வசம் ஒப்படைத்துவிடலாம் என நினைக்கிறாராம் விஜய். வடக்கு மண்டலத்தில் ராமதாஸ், தென் மண்டலத்தில் ஓபிஎஸ், மேற்கு மண்டலத்தில் செங்கோட்டையன் என்று சாதி ரீதியான வாக்குகளை ஈர்க்க தனியாக ஒரு கணக்குப் போடுகிறது தவெக.

இப்படி, மூன்று முக்கிய அணிகளுக்கும் தேவைப்படும் நபராக இருக்கும் ஓபிஎஸ் இந்த ஒரு தேர்தலை விட, தான் மற்றும் தன்னை நம்பி இருப்பவர்களின் அரசியல் எதிர்காலத்தை முக்கியமாக நினைக்கிறார். அதனால் தான் சட்டென முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றத்தில் இருக்கிறார். இருந்தாலும் கூட்டணி இருக்கைகள் எல்லாம் வேகமாக நிரம்பி வரும் நிலையில், இன்னும் அதிக நாள் அவரால் அப்படி இருக்க முடியாது என்பதே யதார்த்தம்.

<div class="paragraphs"><p>ஓபிஎஸ்</p></div>
தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி: இண்டியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in