

சென்னை: ‘விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கான கொள்முதலில் அலட்சியம் ஏன்? மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவதில் தவெக அரசுக்கு இத்தனை அலட்சியமா? எல்லாவற்றிலும் ஒரு நிலையான முடிவே இல்லையா?’ என பாஜகவின் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கான கொள்முதலில் முதலில் ரூ.7,235, ரூ.7,476 என விலை நிர்ணயம் செய்து, புதுச்சேரியைவிட சுமார் இருமடங்கு அதிக விலைக்கு வாங்குவதை வாட்டர் பாட்டில், ஹெல்மெட் உள்ளிட்டவற்றைக் கூறி நியாயப்படுத்திய தவெக அரசு, தற்போது கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அதே சைக்கிள்களின் விலையை ஹீரோ நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரூ.5,260, ரூ.5,130 எனக் குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அப்படியானால், ஆரம்பத்திலேயே இந்த விலைக்கு ஏன் கொள்முதல் செய்ய முடியவில்லை? மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவதில் இத்தனை அலட்சியமா? அல்லது கடும் எதிர்ப்புகள் வந்தால்தான் அரசுக்கு உண்மை உறைக்குமா?
டெண்டர்களை அறிவிப்பதும், ரத்து செய்வதும், அரசாணைகளைப் பிறப்பிப்பதும், திரும்பப் பெறுவதுமாகத் தொடரும் இந்த நிர்வாகக் குளறுபடிகள் தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாட்டையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
ஆட்சி தான் மாறியிருக்கிறதே தவிர, அனுபவமுள்ள அரசு அதிகாரிகள் டெண்டர், அரசாணை உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளை அறிந்திருந்தும் தொடர்ந்து தவறிழைப்பது விசித்திரமாகவே உள்ளது.
இனி வரும் காலங்களில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் திட்டங்களை அறிவிக்கும் முன்னர் டெண்டர் உள்ளிட்ட பணிகளில் வெளிப்படைத் தன்மையையும், தரத்தில் சமரசமில்லாமல் அதே நேரத்தில் நிதிநிலையைப் பாதிக்காதவாறும் பொருட்களைக் கொள்முதல் செய்ய தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்தார்