1793-ல் தொடங்கிய நிலவரி வசூல் முறை ரத்து ஏன்? - வருவாய்த் துறை செயலர் கே.எஸ்.பழனிசாமி தகவல்

1793-ல் தொடங்கிய நிலவரி வசூல் முறை ரத்து ஏன்? -  வருவாய்த் துறை செயலர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
Updated on
2 min read

சென்னை: கடந்த 1793-ல் தொடங்​கிய நில​வரி வசூல் முறை ரத்​துக்கு நில வரு​வாய் முறையை எளிமைப்​படுத்​து​வதே காரணம் என வரு​வாய்த்​துறை துறை செயலர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

ஆங்​கிலேயர் காலத்து நில வரி வசூல் முறை ஜூலை 1 முதல் ரத்து செய்​யப்​படு​வ​தாக சட்​டப்​பேர​வை​யில் வரு​வாய்த்​துறை அமைச்​சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த ஆக.18-ம் தேதி அறி​வித்​தார். இந்த அறி​விப்பு பொது​மக்​கள் மத்​தி​யில் மிகுந்த வரவேற்பை பெற்​றுள்​ளது.

இந்​நிலை​யில், இந்த நில​வரி வசூல் ரத்​துக்​கான காரணம் குறித்து வரு​வாய்த்​துறை செயலர் பழனி​சாமி கூறிய​தாவது: நிலம், மனித சமு​தா​யத்​தின் நாகரிக பரிணாம வளர்ச்​சி​யில் தொடங்கி ஒரு நாட்​டின் அரசி​யல் வரலாற்றை நிர்​ண​யிக்​கும் முக்​கிய காரணி​யாக திகழ்ந்து வந்​துள்​ளது. நிலத்​தின் மீது விதிக்​கப்​படும் நில​வரி மற்​றும் அதை வசூலிக்​கும் முறை​யானது மன்​ன​ராட்சி காலத்​திலிருந்து தற்​போது வரை அரசின் முக்​கிய நிர்​வாகப் பணி​யாக​வும், வரு​வா​யாக​வும் இருந்து வரு​கிறது.

இந்​தி​யா​வில் அரசர் ஷெர்ஷா சூரி​யின் காலத்​தில் நிள அளவை முறை​யில் தொடங்​கிய நில நிர்​வாகம், முகலாய அரசர் அக்​பர் காலத்​தில் வட இந்​தியா முழு​வதும் முறைபடுத்​தப்​பட்​டது. அதைத் தொடர்ந்து ஆங்​கிலேய ஆட்​சி​யின்​போது, தலைமை ஆளுந​ராக இருந்த கார்ன்​வாலிஸ் என்​பவ​ரால் 1793-ல் நிலை​யான நில​வரி திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்டு ஜமீன்​தார் வாயி​லாக வசூலிக்​கப்​பட்​டது.

கடந்த 1820-ல் மெட்​ராஸ் மாகாண ஆளுநர் தாமஸ் மன்றோ என்​பவ​ரால் ‘இர​யத்​து​வாரி முறை’ அமல்​படுத்​தப்​பட்​டு, நிலத்​தினை உழுது, பயி​ரிடு​பவரிடம் இருந்து நேரடி​யாக வரி வசூல் செய்​யும் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டது.

நில வரு​வாய் என்​பது, நிலத்​தினை உழுது, பயி​ரிடும் அனைத்து நில உடமை​யாளர்​களும், ரயத்​துகளும் ஜுலை-1 முதல் ஜூன் 30 வரையி​லான ஒவ்​வொரு பசலி ஆண்​டுக்கு அரசுக்கு செலுத்​தும் வரித்​தொகை ஆகும். ரயத்​து​வாரி முறை​யின்​கீழ், ரயத்​திட​முள்ள ஒவ்​வொரு நில​மும் முழு​மை​யாக அளவை செய்​யப்​பட்​டு, நிலத்​தின் தன்மை மண், தரம், பாசன ஆதா​ரம் மற்​றும் விளைச்​சல் ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் ‘தீர்​வை’ நிர்​ண​யம் செய்​யப்பட்​டு, அதனடிப்​படை​யில், நிலவரி வசூலிக்​கப்​பட்டு வந்​தது.

நாடு சுதந்​திரமடைந்த பின்​னர், ரயத்​து​வாரி சட்​டம், இனாம் ஒழிப்பு தொடர்​பான பல்​வேறு சட்​டங்​கள் அமல்​படுத்​தப்​பட்​டு, நில உடமை​யாளர்​களிடம் இருந்து மண்​ணின் தரம் மற்​றும் பாசன ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் வரி நிர்​ண​யம் செய்​யப்​பட்டு வசூலிக்​கப்​பட்டு வந்​தது.  கடந்த 2009-10-ம் நிதிஆண்​டில் நில​வரி விதிப்பு முறையை எளிமை படுத்​த​வும், கிராம கணக்​கு​கள் மற்​றும் பதிவேடு​களில் உரிய மாற்​றங்​கள் செய்​ய​வும், வரு​வாய் தீர்​வா​யம் (ஜமாபந்​தி) முறை​யினை சீரமைக்​க​வும் நில​வரி சீர்​திருத்த குழு அமைக்​கப்​பட்​டது.

அக்​குழு​வின் அறிக்​கை​யின் அடிப்​படை​யில் 2010-ல் தமிழகத்​தில் உள்ள நிலங்​களுக்கு அவற்​றின் வகை​பாட்​டுக்கு ஏற்ப நில​வரி தொகை​யானது புஞ்சை நிலத்​துக்கு எக்​டேருக்கு ரூ.5 என்ற வீதத்​தி​லும், நஞ்சை நிலத்​துக்கு எக்​டேருக்கு ரூ.12 என்ற வீதத்​தி​லும் நிர்​ண​யம் செய்​தும் தலவரி, தலமேல்​வரி, பசலி ஜாஸ்​தி, தீர்வை ஜாஸ்​தி, கூடு​தல் தண்​ணீர் வரி மற்​றும் பாசன மேம்​பாட்டு வரி போன்ற மேல் வரி​களை நீக்​கம் செய்​தும் ஆணை​யிடப்​பட்​டது.

நில வரு​வாய் முறையை எளிமைப்​படுத்​து​வதற்கு முன்​னர் வெள்​ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்​பாடு​கள் மற்​றும் பல்​வேறு காரணங்​களால் பல பசலி ஆண்​டு​களாக வசூலிக்​கப்​ப​டா​மல் நிலு​வை​யில் உள்ள நில​வரி தொகை​யினை நில உரிமை​யாளர்​களிடம் இருந்து வசூல் செய்​வ​தில் அதிக சிரமங்​கள் உள்​ள​தா​லும், விவ​சா​யிகள் மற்​றும் நில உரிமை​யாளர்​கள் நலன் கரு​தி​யும் 1436-ம் பசலி ஆண்டு முதல் நில​வரி வசூல் நடை​முறை​யினை ரத்து செய்​யப்​படு​வ​தாக சட்​டப்​பேர​வை​யில் அறிவிக்​கப்​பட்​டது. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

1793-ல் தொடங்கிய நிலவரி வசூல் முறை ரத்து ஏன்? -  வருவாய்த் துறை செயலர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
பெண் குழந்தையை ரூ.4 லட்சத்துக்கு விற்ற தாய் உள்பட 4 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in