

சென்னை: “நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட விஷயங்களும் கேள்வி கேட்கப்பட்டு விமர்சிக்கப்படுகிறது. இந்த விமர்சனம், நான் ஒரு பெண் என்பதற்காகவா அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதற்காகவா?” என்று சென்னை மேயர் பிரியா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நான் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகி விடுகிறது. அன்று முதல் இன்று வரை, மிகச் சாதாரண விஷயங்கள்கூட பிரச்சினை ஆக்கப்படுகின்றன. நான் பர்கர் சாப்பிட்டாலோ, முடி வெட்டிக்கொண்டாலோகூட பிரச்சினை ஆகிறது.
நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட விஷயங்களும் கேள்வி கேட்கப்பட்டு விமர்சிக்கப்படுகிறது. இந்த விமர்சனம், நான் ஒரு பெண் என்பதற்காகவா அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதற்காகவா? என் விஷயம் என்று வரும்போது, பெண்ணியவாதிகளும் பெண்களுக்காகக் குரல் கொடுப்பதாக உரிமை கோருபவர்களும் எங்கே மாயமாய் மறைந்து போகிறார்கள் என்று தெரியவில்லை.
பொது வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களின் தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றித் தவறாக மதிப்பிட யாருக்கும் உரிமை கிடையாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுக்கென்று சுயமரியாதையும், கண்ணியமும், தனது சொந்த விருப்பப்படி வாழ்வதற்கான உரிமையும் உண்டு. மேயர் என்ற பதவியைத் தாண்டி, அந்தப் பெண்ணை மதிக்க நினைவில் வையுங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேயர் பிரியா வெளியிட்டுள்ள பதிவை மேற்கோள் காட்டி திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி வெளியிட்ட எக்ஸ்தளப் பதிவில், “ஒரு ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் அரசியலில் தடம் பதிப்பதே மிகவும் கடினமானது; அதிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து அதைச் செய்வது அதைவிடக் கடினம்.
இத்தகைய தடைகளைத் தாண்டி முன்னேறும் பெண்களைக் குறிவைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ‘எந்தவொரு பெண்ணைப் பற்றியும் தவறாகப் பேச யாரையும் அனுமதிக்க மாட்டேன்’ என்று முதல்வர் விஜய் கூறுகிறார். ஆனால், மேயர் பிரியாவுக்கு எதிராகத் தனது ரசிகர்களும் தொண்டர்களும் நடத்தும் இந்தத் தாக்குதல்களை அவர் அனுமதிப்பது ஏன்?” என தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
சென்னை மாநகராட்சியின் 3-வது பெண் மேயரான பிரியா, பதவியேற்றது முதல் அவ்வப்போது சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு குடை பிடித்தது, அப்போதைய முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கியபடி பயணித்தது மற்றும் சமீபத்தில் மேயர் பிரியாவுக்கும், எம்எல்ஏ பல்லவிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவர் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மேயர் பிரியா சமீபத்தில் தனது சிகை அலங்காரத்தை மாற்றினார். ‘பாப் கட்டிங்’ முறையில் வெட்டி, ஸ்டைலாக சென்னை மாமன்றக் கூட்டத்துக்கு அவர் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. அவரது இந்த மாற்றம் கவனம்பெற்ற நிலையில், சிலர் அவரைக் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில்தான் தன் மீதான விமர்சனங்களுக்கு மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார்.