உளுந்தூர்பேட்டை தொகுதியில் உச்சம் தொடப்போவது யார்?

உளுந்தூர்பேட்டை தொகுதியில் உச்சம் தொடப்போவது யார்?
Updated on
2 min read

கள்ளக்குறிச்சி: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் 1952-ல் உருவாக்கப்பட்ட பொதுத் தொகுதிகளில் உளுந்தூர்பேட்டை தொகுதியும் அடங்கும். 1977-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பில் இந்த தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு, உளுந்தூர்பேட்டை (தனி) தொகுதி எனவும், மற்றொன்று திருநாவலூர் பொதுத் தொகுதியானது.

2009-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்பில் உளுந்தூர்பேட்டை வட்டத்தை உள்ளடக்கிய பொது தொகுதி யாக 2011 முதல் தேர்தலைச் சந்திக் கிறது. உளுந்தூர்பேட்டை வட்டத்தை மட்டுமே முழுமையாக உள்ளடக்கிய சட்டப்பேரவைத் தொகுதி என்ற பெருமை இத்தொகுதிக்கு உண்டு.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டு தமிழகத்தில் 34-வது மாவட்டமாக மலர்ந்தது. 45 ஆண்டு காலமாக உளுந்தூர்பேட்டை பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது.

2021 செப்டம்பர் மாதம் 24 வார்டுகள் கொண்ட நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 1952 முதல் காங்கிரஸ் 3 முறையும், சுதந்திர கட்சி ஒரு முறையும், 1971 முதல் திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2021-ல் நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஏ.ஜெ.மணிக்கண்ணன் 5,256 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவைச் சேர்ந்த குமரகுருவை தோற்கடித்தார்.

தற்போது நடைபெறுகின்ற தேர்தலில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல், அதிமுக சார்பில் ரா.குமரகுரு, நாம் தமிழர் கட்சி சார்பில் லோகேஸ்வரி, தவெக சார்பில் சுதாகர் உட்பட மொத்தம் 14 பேர் களத்தில் உள்ளனர்.

உளுந்தூர்பேட்டை தொகுதியை பொறுத்தவரை நான்குமுனைப் போட்டி நிலவினாலும், திமுக - அதிமுக இடையேதான் நேரடி போட்டியாக உள்ளது. திமுக சார்பில் களமிறங்கியிருக்கும் ஜி.ஆர்.வசந்தவேல் கடந்த 2016-ல் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில், மீண்டும் களமிறங்கியுள்ளார்.

ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்ற அனுதாபம் தொகுதி முழுக்க எதிரொலிக்கிறது. திமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்து வரும் இவரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திக்கேயன் கடுமையாக உழைத்து வருகிறார். இருப்பினும் உட்கட்சிப் பிரச்சினையில் ஒருசில ஒன்றிய செயலாளர்கள் எதிர் முகாமின் தூதுவர்களாக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அதிமுக சார்பில் களமிறங்கியிருக்கும் அதிமுக மாவட்டச் செயலாளர் ரா.குமரகுரு 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றவர். கடந்த தேர்தலில் தோல்வியை தழுவினார். கடந்த மக்களவைத் தேர்தலிலும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரம் என கட்சியினரால் அறியப்பட்டவர். மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளையும் வெற்றிபெறச் செய்வதோடு, தன்னையும் கரை சேர்க்க சூறாவளிப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். தொகுதியில் உள்ள வாக்காளர் களுக்கு நன்கு அறிமுக மானவர். எந்த வீட்டில் விசேஷம், துக்கம் என்றாலும் தவறாமல் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருப்பது இவருக்கு பலம் என கூறப்பட்டாலும், கட்சியில் தன்னை தாண்டி யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணமும் மற்றும் சாதிய ரீதியாக பாகுபாடு காட்டக்கூடியவர் என்ற குற்றச்சாட்டும் வலுவாக உள்ளது.

விவசாயம் சார்ந்த பகுதியாக விளங்கும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், சர்வதேச தரத்திலான காலணி தொழிற் சாலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவது இப்பகுதி இளை ஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் ஏற்படுத்தியிருப்பது சற்று ஆறுதலான விஷயம்.

அதேநேரத்தில் உளுந்தூர்பேட்டை நகரம் மட்டுமின்றி ஊரகப் பகுதிகளிலும் குடிநீர், வடிகால் பணி பராமரிப்பில் மெத்தனப்போக்கால் தரமற்ற சாலைகள் அமைத்திருப்பதாலும் அடிக்கடி இப்பிரச்சனைத் தொடர்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது.

மேலும் சென்னை - திருச்சி சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள நகரமாக உள்ளதால், போக்குவரத்து போலீஸாரின் திட்டமிடப்படாத செயல்பாடுகளால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியவில்லை. சென்னை - திருச்சி சாலையில் பயணிக்கும் வாகனங்களில் பெரும்பாலான விபத்துக்கள் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் தான் நடைபெறுகிறது. என நவீன உயர்தர விபத்து சிகிச்சை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் 1,48,929

  • பெண் 1,48,499

  • மூன்றாம் பாலினத்தவர் 4

  • மொத்த வாக்காளர்கள் 2,97,472

உளுந்தூர்பேட்டை தொகுதியில் உச்சம் தொடப்போவது யார்?
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in