விழுப்புரம் தொகுதியில் ‘விடியல்’ யாருக்கு?

விழுப்புரம் தொகுதியில் ‘விடியல்’ யாருக்கு?
Updated on
3 min read

முன்பு ‘நடுநாடு’ என போற்றப்பட்ட பகுதியில் இருக்கிறது ’விழுப்புரம்’. - சோழர் ஆட்சியில் குறுநில மன்னர் விழுப்பரையர் வசம் இருந்தது இப்பகுதி. ‘விழுப்பரையர்’ என்றால் ‘போர்க் களத்தில், விழுப்புண்களை பெற்ற சிற்றரசர்‘ என பொருளாகும். அதனால் ‘விழுப்பரையபுரம்’ என அழைக்கப்பட்டு, பின் ‘விழுப்புரம்’ என மருவியதாக வரலாறு கூறுகிறது.

காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகர சுவாமிகள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த ஊர். விழுப்புரத்தில் கைலாசநாதர் கோயில், வைகுண்டவாச பெருமாள் கோயில், பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில், கோலியனூர் வாலீஸ்வரர் கோயில் உட்பட சைவ, வைணவ கோயில்கள் ஏராளம். கிறிஸ்து அரசர் ஆலயம், தூய ஜேம்ஸ் ஆலயம், புனித சவேரியர் ஆலயம் மற்றும் மசூதிகள் உள்ளன.

சென்னை மற்றும் தென் தமிழகத்தை இணைக்கும் இதய பகுதியாக விழுப்புரம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ரயில் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றிய பகுதியாகும். 1919-ல் நகராட்சியாக உருவானது விழுப்புரம். 1953-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1973-ல் முதல் நிலை நகராட்சியாகவும், 1988-ல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, அதிமுக ஆட்சியில் கடந்த 1993-ல் பிரிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டமாக உதயமாகி, அதன் தலைநகராக விழுப்புரம் உருவெடுத்தது. அதன் பிறகு தமிழக வரைபடத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக விழுப்புரம் திகழ்கிறது.

திமுக ஆதிக்கம்

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியானது விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகள், வளவனூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் கோலியனூர் ஒன்றியத்தில் 45 ஊராட்சிகள், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள், காணை ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளை உள்ளடக்கியது. 1952 முதல் 16 முறை தேர்தலை சந்தித்துள்ளது.

1952-ல் உழைப்பாளர் கட்சி, 1957-ல் காங்கிரஸ், 1962, 1967, 1971, 1980, 1989, 1996, 2001, 2006, 2021-ல் திமுகவும் மற்றும் 1977, 1984, 1991, 2011, 2016-ல் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. 9 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும், தலா ஒரு முறை உழைப்பாளர் கட்சியும், காங்கிரசும் வாகை சூடியிருக்கிறது.

திமுக, அதிமுக நேரடியாக 9 முறை மோதி இருக்கிறது. இதில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும் வென்றுள்ளது. வன்னியர்கள், பட்டியலின மக்கள், உடையார் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். நாயுடு, ரெட்டியார், செட்டியார் உள்ளிட்டோர் மற்றும் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், ஜெயின் சமூகத்தினர் வாக்குகளும் பரவலாக உள்ளன.

2026 தேர்தலில் திமுக சார்பில் மருத்துவர் லட்சுமணன் எம்எல்ஏ மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். 2011, 2016-ல் வெற்றி பெற்றிருந்தாலும், 2021-ல் ஏற்பட்ட தோல்வியால், தனது சொந்த தொகுதியான மயிலம் தொகுதிக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இடம்பெயர்ந்துவிட்டார். இதனால், அதிமுக சார்பில் முதல் பெண் வேட்பாளராக கோலியனூர் ஒன்றியக் குழு முன்னாள் தலைவரான விஜயா சுரேஷ்பாபு போட்டியிடுகிறார்.

மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, தவெக சார்பில் மோகன்ராஜ் உட்பட மொத்தம் 24 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரது பிரச்சாரம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் 2-வது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் லட்சுமணன் பிரச்சாரம் செய்கிறார்.

அவரது பிரச்சாரத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ரூ.8 ஆயிரம் கூப்பன் உள்ளிட்ட அம்சங்கள் எடுத்துரைக்கப்படுகிறது. தேர்தல் களத்துக்கு புதுமுகம், அதிமுக வேட்பாளர் விஜயா சுரேஷ்பாபு. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பிரச்சாரம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் சுழன்று வருகிறார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் உள்ளிட்ட அம்சங்களை விளக்கி பிரச்சாரம் செய்கிறார். கோலியனூர் ஒன்றியம், வளவனூர் பேரூராட்சியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றாலும், இவர்களது வெற்றியை தீர்மானிப்பது விழுப்புரம் நகரத்தில் உள்ள வாக்குகளாகும்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன், தனது 6 மாதகைக்குழந்தையுடன் வாக்கு சேகரித்து வருகிறார். இவரது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரச்சாரம் இல்லையென்றாலும், அவரது வாக்குறுதிகளை அச்சடித்துதுண்டு பிரசுரங்களாக மக்களிடம் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்கிறார்.

விவசாயத்துக்கு முன்னுரிமை, விவசாயத்தில் அரசு பணி, இலவசங்களால் பொருளாதார சீரழிவு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி, தமிழகர்களை கையேந்தவிட மாட்டேன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்னிறுத்தி தனி ஒருவராக சூழல்கிறார். இதேபோல் தவெக வேட்பாளர் மோகன் ராஜ் களத்தில் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்.

பிரிவினையை ஏற்படும் கட்சி பாஜக, ஊழல் கட்சிகள் திமுக, அதிமுக என தவெக தலைவர் விஜய் கூறிய கருத்துகளை எடுத்துரைத்து வாக்கு சேகரிக்கிறார். மேலும் கல்லூரி மாணவர்களுக்கு நிபந்தணையற்ற கல்வி கடன் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை, மாணவ மாணவிகளிடம் கூறி வருகிறார். இவர்கள் நால்வரை தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் குமரனும் பிரச்சாரம் செய்கிறார். நாதக, தவெக, தவாக வேட்பாளர்கள் பெரும் வாக்குகள், திமுக மற்றும் அதிமுக வெற்றியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண செய்யலாம்.

தீர்வு காணப்படாத பிரச்சினைகள்

விழுப்புரம் நகரில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணாதது, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழை காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்குவதை தடுக்காமல் இருப்பது, மாநகராட்சிக்கு இணையாக வளர்ச்சி பெற்றுள்ள விழுப்புரம் நகருக்கு ரிங் ரோடு அமைக்காதது, கோலியனூரான் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், தூர் வாராமல் இருப்பது, விழுப்புரம் நகரில் உள்ள பாதாளச் சாக்கடை திட்ட கழிவுநீரை கோலியனூரான் கால்வாயில் வெளியேற்றுவது மற்றும் சுத்திகரிப்பு செய்யாமல் எருமணதாங்கல் ஏரியில் இருந்து கழிவுநீரை வெளியேற்றி கோலியனூர் ஏரியை மாசடையசெய்வது, மருதூர் ஏரியில் குப்பைக் கழிவுகளை கொட்டி நிலத்தடி நீரை மாசுப்படுத்தப்படுகிறது.

பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்காமல் மேடும் பள்ளமாக இருப்பது, விழுப்புரம் நகராட்சி ஆண்கள் பள்ளி மைதானத்தில் கழிவுநீரை தேக்கி சீரழித்தது, விழுப்புரம் நகரில் உள்ள குளங்களை தூர் வாரி மழைநீரை சேமிக்காமல் இருப்பது (அதிமுக ஆட்சியில் பூந்தோட்ட குளம் சீரமைக்கப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்படுவது ஆறுதல் அளிக்கிறது), வளவனூரில் பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்காதது, புதுச்சேரி சாலையை விரிவாக்கம் செய்யாதது, பாணாம்பட்டு சாலை மற்றும் திருக்கோவிலூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலங்கள் கட்டாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இருப்பது ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரத்தில் அரசு வேளாண் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்கிறது. தென்பெண்ணையாறு மற்றும் மலட்டாற்றில் தடுப்பணை கட்டி, மழை காலங்களில் வரும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். குறு சிறு தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில், தொழிற்பேட்டையை கொண்டு வர வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க தொழில் பூங்கா கொண்டு வர வேண்டும். அரசு மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தி, காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆயுஷ் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலுப்பெற்று நிற்கின்றன.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண்கள் - 1,19,622

  • பெண்கள் - 1,26,201

  • மூன்றாம் பாலினத்தவர் - 76

  • மொத்தம் 2,45,899

விழுப்புரம் தொகுதியில் ‘விடியல்’ யாருக்கு?
ஓபிஎஸ் ஸ்டேட்டஸ்... போடி தொகுதி ‘பதம்’ பார்க்குமா, பதவி தருமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in