

திருவண்ணாமலை: தமிழக சட்டப்பேரவை தொகுதிகளில் 68-வது இடத்தில் இருப்பது திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சட்டப்பேரவை தொகுதி. இந்த தொகுதி யில் மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத் துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது, கடந்த 2023-ல் தமிழ்நாடு அரசு குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த தொகுதி திருவத்திபுரம் நகராட்சி மற்றும் வெம்பாக்கம், அனக்காவூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களையும், 171 கிராம ஊராட்சிகளையும், செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய 2 வட்டாட்சியர் அலு வலகங்களை கொண்டுள்ளன.
செய்யாறு தொகுதியில் வன்னியர், முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகப்படியாகவும், அதற்கு அடுத்தபடி யாக இஸ்லாமியர்கள் மற்றும் இதர பிரிவினர் உள்ளனர். இந்த தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
இங்கு, சிப்காட் தொழிற்பேட்டை உரு வாக்கப்பட்டு பல முன்னணி தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, பிரசித்தி பெற்ற செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில், மாமண்டூர் குடைவரை கோயில்கள் மற்றும் ராஜேந்திர சோழனின் நினைவிடங்கள் இப்பகுதியின் தொன்மையை உணர்த்துகின்றன.
செய்யாறு தொகுதி கடந்த 1951-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரு கிறது. இதுவரை இந்த தொகுதியில் 8 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும், 2 முறை காங்கிரஸ் மற்றும் பாமக, பொது நல கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.
தற்போது நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் செய்யாறு தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் ஓ.ஜோதி 2-வது முறையாக போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியனும், தவெக வேட்பாளராக இந்த தொகுதியில் கடந்த 2016-ல் அதிமுக எம்எல்ஏவாக இருந்த தூசி கே.மோகன் போட்டியிடுகிறார். இவர், அதிமுகவில் தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், தவெகவில் இணைந்து அதே தொகுதியில் போட்டி யிடுகிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தமிழ்செல்வன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 13 பேர் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளர் கடந்த 5 ஆண்டு காலத்தில் தொகுதியில் நிறைவேற்றப் பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்தும் வாக்கு சேகரித்து வரு கிறார். அதிமுக வேட்பாளர் மற்றும் தவெக வேட்பாளர்கள் திமுகவின் குறைகளை தெரிவித்தும், விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்ட நாள் கோரிக்கைகள்
* செய்யாறு தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
* செய்யாறு மாவட்ட தலைமை அரசு மருத்துமனையில் போதிய மருத் துவர்கள் நியமித்து, மருத்துவ வசதி களை மேம்படுத்த வேண்டும்.
* அரசு மகளிர் கல்லூரி அமைத்து போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
* செய்யாறு பகுதியிலிருந்து இரவு நேரத் தில் பேருந்து வசதிகள் கிடையது. அனைத்து பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் பேருந்துகளை இயக்க வேண்டும்.
* செய்யாறு-காஞ்சிபுரம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
* செய்யாறு சிப்காட் 3-வது அலகு விரி வாக்க பணிக்கான நிலத்தை கையகப் படுத்துவதை கைவிட வேண்டும் என்பது விவசாயிகள் முக்கிய கோரிக் கையாக உள்ளது.
இதுவரை வெற்றி பெற்றவர்கள்
1951 தர்மலிங்கம் - பொது நல கட்சி
1957 ராமச்சந்திரன் - காங்கிரஸ்
1962 கோவிந்தன் - திமுக
1967 கோவிந்தன் - திமுக
1971 கோவிந்தன் - திமுக
1977 கோவிந்தன் - திமுக
1980 பாபு ஜனார்த்தனம் - திமுக
1984 முருகன் - அதிமுக
1989 அன்பழகன் - திமுக
1991 தேவராஜ் - அதிமுக
1996 அன்பழகன் - திமுக
2001 உலகரட்சன் - பாமக
2006 விஷ்ணு பிரசாத் - காங்கிரஸ்
2011 என்.சுப்பிரமணியன் - அதிமுக
2016 தூசி கே.மோகன் - அதிமுக
2021 ஓ.ஜோதி - திமுக
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,17,854
பெண் - 1,21,993
மூன்றாம் பாலினத்தவர் - 9
மொத்த வாக்காளர்கள் - 2,39,856