

தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 82-வது இடத்தில் உள்ளது ஆத்தூர் (தனி) தொகுதி. சேலம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையை ஒட்டி இத்தொகுதி அமைந்துள்ளது.
சேலம் மாவட்டத்தின் 2 முக்கிய நகராட்சிகளான ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் ஆகியவற்றைக் கொண்ட இத்தொகுதியில் பெத்தநாயக்கன் பாளையம், ஏத்தாப்பூர், கீரிப்பட்டி பேரூராட்சிகள், ஆத்தூர் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களை தன்னகத்தே கொண்டது ஆத்தூர் தொகுதி.
இத்தொகுதியில் உள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு. தொகுதியில் பரவலாக மரவள்ளிக்கிழங்கு, நெல், வாழை, மஞ்சள், பருத்தி, வெற்றிலை, பாக்கு ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.
தொகுதியில் மரவள்ளி அரவை ஆலைகள், நூற்பாலைகள் ஆகியவை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. ஜவ்வரிசி உற்பத்தியில் மாவட்ட அளவில் முதலிடத்தில் இருக்கிறது. ஆத்தூர் தொகுதியில் பட்டியலினத்தவர், துளுவ வேளாளர், வன்னியர் உள்ளிட்டோர் பெரும்பான்மை சமுதாயத்தினராக இருக்கின்றனர்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
மரவள்ளி அரவை ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. நகரப்பகுதிகளின் கழிவுகள், தொழிற்சாலைகளின் கழிவு நீரால், வசிஷ்ட நதி மிகவும் மாசடைந்துவிட்டது.
நீர் தட்டுப்பாடு நிறைந்த ஆத்தூர் தொகுதிக்கு, காவிரி உபரிநீரைக் கொண்டு வந்து, ஏரி மற்றும் குளங்களில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. மாவட்டத் தலைநகரான சேலத்தில் இருந்து ஆத்தூர் 50 கிமீ தொலைவில் உள்ள நிலையில், ஆத்தூரை அடுத்துள்ள கிராமங்களின் மக்கள் சேலத்துக்கு வந்து செல்வது கடினமாக இருப்பதால், ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டு, தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.
ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளி வட்ட சாலை, நகரப்பகுதி சாலைகளை விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், கூட்டுறவு ஜவ்வரிசி ஆலை அமைக்க வேண்டும். பெரம்பலூர், நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதிகள் மற்றும் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய வட்டங்களில் உள்ள பின்தங்கிய மாணவர்கள் பயிலும் வகையில் ஆத்தூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். பெத்தநாயக்கன் பாளையத்தில் பேருந்து நிலையம், காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
ஆத்தூர் மஞ்சினி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். நரசிங்கபுரத்தில் உழவர் சந்தை அமைக்க வேண்டும். ஆத்தூரில் உள்ள பழமையான கோட்டையைப் புதுப்பித்து, சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.
புத்திரகவுண்டன் பாளையத்தில் சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்து, வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். சேலம் மாவட்டத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு இடமான கூலமேட்டில், ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க வேண்டும். ஆத்தூர்- அரியலூர் இடையே அறிவிக்கப்பட்ட புதிய ரயில்வே வழித்தடத்தை அமைக்க வேண்டும் என்பவை தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
கடந்த கால தேர்தல் முடிவுகள்
ஆத்தூர் தொகுதியில் இதுவரை நடைபெற்ற 16 தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் அதிமுக தலா 5 முறை வெற்றி பெற்றுள்ளன. திமுக 4 முறையும், சுயேச்சைகள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுகவை பொறுத்தவரை கடந்த 1989-ம் ஆண்டு முதல் கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து 8 முறை ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வருகிறது. அதில் 5 முறை வெற்றி பெற்றது.
அதிலும் 2011 தேர்தல் முதல் கடந்த 3 முறையாக தொடர்ச்சியாகவும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை திமுக போட்டியிட்ட நிலையில், தற்போது கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது.
களம் காணும் வேட்பாளர்கள்
அதிமுக சார்பில் இப்போதைய எம்எல்ஏ., ஜெயசங்கரன் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே இத்தொகுதியில் 3 முறை போட்டியிட்ட அர்த்தனாரி இப்போது போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியில் மோனிஷா, தவெக சார்பில் செல்வபாரதி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலின்போது ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளை கைப்பற்றியதால், இம்முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற முடியும் என நம்பிக்கையோடு திமுக கூட்டணி இருக்கிறது. ஆத்தூர் அதிமுகவின் கோட்டையாகிவிட்டது, அதை அசைக்க முடியாது என்ற நம்பிக்கையோடு அக்கட்சியினர் தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர்.
நாம் தமிழர், தவெகவினர், வாக்காளர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி தொகுதியைக் கைப்பற்றுவோம் என்று தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டி கடுமையாக இருப்பதால், வெற்றி யாருக்கும் எளிதாக இருக்காது, வெற்றிக்கான வாக்குகள் வித்தியாசமும் குறைவாகவே இருக்கும். வெற்றியை வாக்காளர்கள் யாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,09,943
பெண் - 1,116,517
மூன்றாம் பாலினத்தவர் - 21
மொத்த வாக்காளர்கள் - 2,26,481