பெண்கள் மட்டுமே போட்டியிடும் தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி யாருக்கு?

பெண்கள் மட்டுமே போட்டியிடும் தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி யாருக்கு?
Updated on
2 min read

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியைப் பொறுத்தவரை பெண்கள் மட்டுமே போட்டியிடக் கூடிய தொகுதியாக உள்ளது. இந்தத் தொகுதியில் தற்போது, நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

குறிப்பாக திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் இடையே நேரடிப் போட்டி இருந்தாலும், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகள் வாக்குகளைப் பிரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.

திமுக வேட்பாளர் இந்திராணி, அதிமுக வேட்பாளர் சத்யபாமா, தவெக வேட்பாளர் கவுரி சித்ரா, நாதக வேட்பாளர் திவ்யா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

தாராபுரம் தனித் தொகுதியாக இருந்தாலும், பொதுப் பிரிவு வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கின்றன. இத்தொகுதியில் கொங்கு வெள்ளாளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர்.

இவர்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு இருக்கிறதோ, அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். பட்டியலின மக்கள் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சமூகத்தினர் கணிசமான அளவில் உள்ளனர்.

தாராபுரம் நகராட்சிப் பகுதிகளில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பரவலாக உள்ளனர். இவர்களின் வாக்குகளும் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது.

நீண்ட கால பிரச்சினைகள்

தாராபுரம் நகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீர் நேரடியாக அமராவதி ஆற்றில் கலப்பதால் ஆற்று நீர் பெருமளவு மாசடைந்துள்ளது. இது குடிநீர், விவசாயத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

பிஏபி-யின் கசிவு நீர் குட்டையான உப்பாறு அணைக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால், சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி இன்றி பாதிக்கப்படுகின்றன. இதற்காக பிஏபி திட்டத்திலிருந்து உபரி நீரைக்கொண்டு வர வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

பருவமழை இல்லாத காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்குச் செல்வதால், தென்னை, முருங்கை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

தாராபுரம், மூலனூர் பகுதிகளில் முருங்கை, காய்கறிசாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைச் சேமித்து வைத்து நல்ல விலைக்கு விற்க, பெரிய அளவிலான அரசு குளிர்சாதனக் கிடங்கு அவசியமாக உள்ளது.

முருங்கையை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

தாராபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள், நவீன உபகரணங்கள் இருந்தும், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாதது குறையாக உள்ளது. சமீபத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டாலும், அதில் கூடுதல் பாடப்பிரிவுகள், போதிய பேராசிரியர்களை நியமிக்க வேண்டிய தேவை உள்ளது.

தாராபுரம் வட்டாரம் மடத்துப்பாளையம், மணக்கடவு, மூலனூர் வட்டாரம் பெரமியம் ஆகிய பகுதிகளில் தேசிய வங்கி கிளைகள் ஏற்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டம் உருவாகி 17 வருடம் ஆகியும் திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஏற்படுத்தப்படாமல் உள்ளது.

கடந்த கால தேர்தல் முடிவுகள்

2021 சட்டப் பேரவைத்தேர்தலில் திமுகவின் கயல்விழி செல்வராஜ் 89,986 வாக்குகளும், பாஜகவின் எல். முருகன் 88,593 வாக்குகளும் பெற்றனர். 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் மிகக் குறுகிய இடைவெளியில் கயல்விழி செல்வராஜ் வென்றார். 2016 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ். காளிமுத்து வெற்றி பெற்றார்.

2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.பொன்னுசாமி வெற்றி பெற்றார். தாராபுரம் தொகுதியில் இம்முறை கடும் போட்டி நிலவுகிறது. திமுக அரசின் நலத்திட்டங்கள், சிறுபான்மையினரின் வாக்குகள் திமுகவுக்கு பலமாகப் பார்க்கப்படுகிறது.

அதேசமயம், அதிமுகவுக்கு கவுண்டர் சமூகத்தின் வாக்குகளும், கடந்த முறை பாஜக பிரித்த வாக்குகள் இம்முறை கூட்டணி ரீதியாக திரும்பும் என்பதும் சாதகமானதாக உள்ளது. தவெக பிரிக்கும் இளம் வாக்காளர்களின் வாக்குகள் மற்றும் நாம் தமிழர் கட்சி கடந்த முறையை விட அதிக வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதால், வெற்றி வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,06,875

பெண் - 1,15,523

3-ம் பாலினத்​தவர் - 8

மொத்த வாக்​காளர்கள் - 2,22,406

பெண்கள் மட்டுமே போட்டியிடும் தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி யாருக்கு?
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in