மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்?

மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்?
Updated on
1 min read

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய விவசாயத் தொகுதியான மடத்துக்குளம், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு நட்சத்திரத் தொகுதியாக உருவெடுத்துள்ளது. தென்னை, கரும்பு விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட இந்தத் தொகுதியில் இம்முறை கடும் போட்டி நிலவுகிறது.

திமுக சார்பில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன், அதிமுக கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு, நாம் தமிழர் கட்சி சார்பில் எம். ராதாமணி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.திருமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

2011-ல் உருவாக்கப்பட்ட மடத்துக்குளம் தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக இரண்டு முறையும், திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2011-ல் சி. சண்முகவேலு (அதிமுக) - 54.71 % வாக்குகள், 2016-ல் ஆர். ஜெயராமகிருஷ்ணன் (திமுக) - 44.66% வாக்குகள், 2021-ல் சி. மகேந்திரன்(அதிமுக) - 46.35% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

தொகுதி நிலவரம்

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில், மகளிர் உரிமைத் தொகை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள், வலுவான கூட்டணி பலம் ஆகியவை திமுகவுக்கு சாதகமான விசயமாக உள்ளது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைப்புக்கான நிதி ஒதுக்குவதில் நிலவும் தாமதம் விமர்சனமாக உள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் சி.மகேந்திரனின் தனிப்பட்ட செல்வாக்கும், கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கியும் சாதகமானதாக உள்ளது. எதிர்க்கட்சியாக இருப்பதால் தொகுதி வளர்ச்சிப் பணிகளில் நிலவும் தொய்வு மீதான அதிருப்தியும் நிலவுகிறது.

மடத்துக்குளம் தொகுதியில் கொங்கு வேளாளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடர் மக்கள் உள்ளனர். தேவர், செட்டியார் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளும் இத்தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.

அமராவதி சர்க்கரை ஆலை நவீனமயமாக்கல், திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில் இருந்து வழங்கப்படும் கூட்டுக்குடிநீர் திட்டத்தை சீரமைத்தல், ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள 18-க்கும் மேற்பட்ட செட்டில்மென்ட் பகுதிகளுக்கு சாலை, மின்சாரம் மற்றும் மருத்துவ வசதி, தென்னை விவசாயிகளுக்காக மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் அமைத்தல் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகள் பேசுபொருளாக உள்ளன.

சர்க்கரை ஆலையை விரைந்து நவீனப்படுத்தி கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக திமுக உறுதி அளித்துள்ளது. நிலுவையில் உள்ள குடிநீர் திட்டங்களை நிறைவேற்றுதல் மற்றும் கணியூர் பேரூராட்சியை மேம்படுத்துவதாகக் கூறி, அதிமுகவினர் வாக்கு சேகரிக்கின்றனர்.

நாதக, தவெக வேட்பாளர்கள் இளைஞர்களின் ஓட்டுகளை குறிவைத்து களம் இறங்கி உள்ளனர். மடத்துக்குளம் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,03,252

பெண் - 1,11,541

3-ம் பாலினத்​தவர் - 16

மொத்த வாக்​காளர்கள் - 2,14,809

மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்?
கணிக்க முடியாத காரைக்குடி தொகுதியில் கலக்கப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in