

எஸ்ஐஆர் மூலம் பிஹாரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கே எதிர்க்கட்சிகள் எகிறிக் குதித்த நிலையில், தமிழகத்தில் சுமார் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சி கூட்டணியை ஆர்ப்பரிக்கச் செய்திருப்பதுடன் ஆளும் கட்சி கூட்டணியை ஆத்திரப்படவும் வைத்திருக்கிறது.
தற்போது நீக்கப்பட்ட வாக்காளர்களில் சுமார் 27 லட்சம் பேர் இறந்தவர்கள் என்றும், சுமார் 66.5 லட்சம் பேர் இடம் மாறியவர்கள் என்றும் சொல்லி இருக்கிறது தேர்தல் ஆணையம். ஆனால் அந்த 66.5 லட்சம் பேரும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள் என்பது, அவர்கள் எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்திருப்பதாக வெளியிட்ட ஆணையத்தின் முந்தைய அறிவிப்பின் மூலம் தெரியவருகிறது. இதைவைத்து, அவர்களை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பும் திமுக, தங்களுக்கு ஆதரவான வாக்குகளை திட்டமிட்டு நீக்கியிருப்பதாக திட்டித் தீர்க்கிறது.
ஆளும் கட்சி இப்படி ஆத்திரப்படும் அதேசமயம், “எஸ்ஐஆர் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது” என்கிறார் தமிழிசை. திமுக-வினரின் கனவு மண்ணோடு மண்ணாகிப் போனது... போலி வாக்குகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன” என அகமகிழ்கிறார் பழனிசாமி. இருந்தாலும் இன்னொரு வாய்ப்பு இருப்பதால் தெம்பாகவே இருக்கிறது திமுக. “வீடு வீடாகச் சென்றுநீக்கப்பட்டவர்களின் பெயர்களைச் சரி பார்ப்போம்” என தெரிவித்துள்ள திமுக-வின் டி.கே.எஸ்.இளங்கோவன், “தவறுகள் இருந்தால் நீதிமன்றம் செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
“காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டிஉறுப்பினர்கள் அனைவரும் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று சரி பார்க்க வேண்டும். தேர்தல் ஆணையத்தை விட தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று அனைத்துக் கட்சிகளும் நிரூபிக்க வேண்டும்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தங்களுக்கு ஆதரவான வாக்குகளை நீக்கிவிட்டதாகச் சொல்லும் திமுக, அதற்கு ஆதாரமாக சில புள்ளி விவரங்களையும் எடுத்து வைக்கிறது. அதாவது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் 26,375 பேர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது அந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 35.71 சதவீதமாகும். துணை முதல்வர்
உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது அந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 37.17 சதவீதமாகும். அதேசமயம், அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் 17,104 பேரும் காமராஜின் நன்னிலம் தொகுதியில் 28,888 பேரும் மட்டுமே நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஓபிஎஸ்ஸின் போடி தொகுதியில் நீக்கப்பட்டவர்களும் 24,386 பேர் மட்டுமே.
இதேபோல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் நெல்லை தொகுதியில் 42,119 பேரும், தமிழிசைக்கு தயாராவதாகச் சொல்லப்படும் நாங்குநேரி தொகுதியில் 54,260 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் பட்டியல் போட்டுத்தான், தங்கள் கூட்டணி வெற்றிபெறும் தொகுதிகளில் எல்லாம் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது திமுக. இதனால் தங்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கக்கூடும் என்ற அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது.
ஆனால், “சரியான விவரங்களைச் சமர்ப்பித்த யாருடைய வாக்குகளும் நீக்கப்படவில்லை” என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், இல்லாத வாக்குகளை வைத்தே இத்தனை நாளும் வெற்றிபெற்று வந்ததாக திமுக-வின் வெற்றிகளை சந்தேகத்துக்கிடமாக்கும் பாஜக-வும் அதிமுக-வும் போலிகள் கழிக்கப்பட்டிருப்பதால் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகச் சொல்கின்றன. தொடக்கம் முதலே எஸ்ஐஆரை எதிர்த்து வரும் திமுக-வும் அதன்தோழமைக் கட்சிகளும் இதையெல்லாம் எப்படிச் சமாளிக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.