200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கெல்லாம் பலன்?

200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கெல்லாம் பலன்?
Updated on
2 min read

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய், தனது முதல் அரசாணையாக 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். 

இந்த அறிவிப்பு, தமிழகத்தின் ஏழை எளிய குடும்பங்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள அதே வேளையில், அதன் நடைமுறை நுணுக்கங்கள் குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தினால் அதிகம் பலனடையப் போவது மாதத்திற்கு 200 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் எளிய குடும்பங்கள் தான். இதுவரை 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் கட்டணம் செலுத்தி வந்தவர்கள், இனி 200 யூனிட் வரை பயன்படுத்தினால் ஒரு ரூபாய் கூட மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

ஒரு எளிய குடும்பத்தின் வீட்டில் இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் சில விளக்குகள் மட்டுமே பயன்படுத்துபவர்களுக்கு, (200 யூனிட்களுக்குள் பயன்படுத்தினால்) மின்கட்டணம் பூஜ்ஜியமாக மட்டுமே வரும்.

இன்னொரு புறம், முந்தைய நடைமுறையின்படி, 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகை அனைவருக்கும் கிடைத்துவந்தது. ஆனால் தற்போது மின் பயன்பாடு 500 யூனிட்டைக் கடந்துவிட்டால் (உதாரணமாக 505 யூனிட் என்று வைத்துக் கொண்டால்), இந்த 200 யூனிட் இலவசம் கிடைக்காது.

அதுமட்டுமின்றி, பழைய முறையில் கிடைத்து வந்த 100 யூனிட் இலவசமும் கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, 500 யூனிட்டைக் கடப்பவர்கள், பயன்படுத்திய மொத்த யூனிட்டுகளுக்கும் முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

200 முதல் 500 யூனிட்டுகளுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு, இந்தத் திட்டம் பழைய முறையை விடக் கூடுதல் லாபத்தைத் தரும். சிக்கனமாக மின்சாரம் பயன்படுத்தும் எளிய மக்களுக்கு இந்த திட்டம் பலன் தரக்கூடியதாக இருக்கும்.

ஆனால், தற்போது நடுத்தரக் குடும்பங்களிலேயே வீட்டுக்கு இரண்டு ஏசி இருக்கிறது. கோடைக்காலங்களில் கடும் வெப்பம் காரணமாக இந்த இரண்டு ஏசிகளும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை. 

அதே போல தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று விஜய் தெரிவித்தார். ஆனால் தற்போது இரண்டு மாதங்களுக்கு, அதுவும் 500 யூனிட்களுக்குள் பயன்படுத்தினால் மட்டுமே 200 யூனிட் இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் அனைவருக்கும் 200 யூனிட் இலவசம் வழங்கினால், அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.12,000 கோடி கூடுதல் செலவாகும். ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் மின்சார வாரியத்தைப் பாதுகாக்கவே, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் என்ற உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

500 யூனிட்களுக்குள் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் அதே வேளையில், 500 யூனிட்களை கடந்தால் பழைய முறைப்படி 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகாமல்  தொடர வேண்டும் என்பதே நடுத்தர மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கெல்லாம் பலன்?
“கஜானாவில் பணம் இல்லை என கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: மு.க.ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in