

தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசைப் பட்டியலில் 60-வதாக இடம்பெற்றுள்ளது தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி. மொரப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்து, 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
இந்த தொகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி, பி.மல்லாபுரம் மற்றும் கடத்தூர் என 3 பேரூராட்சிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றூர்களும் உள்ளன. தருமபுரி நகரம் தொட்டு சேலம் மாவட்டம் வரை நீண்டு வால்போன்று அமைந்த இத்தொகுதியில் கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி (ஒரு பகுதி) என 3 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த வாக்காளர்கள் உள்ளனர்.
முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, பாக்கு, பருத்தி மற்றும் மலர் சாகுபடியில் அதிகளவு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய நீர் ஆதாரம் மற்றும் சுற்றுலாத் தலமாக சேர்வராயன் மலையடிவாரத்தில் உள்ள வாணியாறு அணை, வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையான தென்கரைக்கோட்டை, முக்கிய ரயில் நிலையமாக பொம்மிடி ரயில் நிலையம் ஆகிய இத்தொகுதியில் உள்ள சிறப்புகளாகும்.
இத்தொகுதியில் சுமார் 45 சதவீதம் வரை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களும், 20 முதல் 25 சதவீதம் வரை ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் உள்ளனர் தொடர்ந்து, கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், ரெட்டியார், செட்டியார், முதலியார் மற்றும் சிறுபான்மையின மக்களும் பரவலாக உள்ளனர்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
விவசாயம் அதனை சார்ந்தவைகளே பிரதான தொழிலாக கொண்டுள்ள இத்தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். முக்கிய நீர் ஆதாரமாக உள்ள வாணியாறு அணையின் கால்வாய்களைத் தூர் வாரிடவும், கால்வாய்களை வறண்டப் பகுதி வரை நீட்டித்து பாசன வசதி ஏற்படுத்த வேண்டும், கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் மற்றும் பாக்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் கொள்முதல் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் இல்லாதது விவசாயிகளின் பெரும் மனக்குறையாக இருந்து வருகிறது.
அரசு சார்பில் மரவள்ளி சேகோ ஆலை மற்றும் அதைச் சார்ந்து ஜவ்வரிசி தயாரிப்பு உள்ளிட்ட புதிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொம்மிடியில் இருந்து தொப்பூர் செல்லும் வழியில் ரயில்பாதையின் வழியாக கரும்பு லாரிகள், விவசாய விளைப்பொருட்கள் ஏற்றவரும் கனரக வாகனங்கள் செல்லும் வகையில், மேம்பாலம் அமைக்க வேண்டும்.
கடத்தூர் பகுதியில் கே.ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றம் செய்து ஏரிகளை நிரப்பவேண்டும். வேப்பாடியாறு பகுதியில் தடுப்பணை அமைத்து பொம்மிடி ஒட்டியுள்ள பகுதிகளுக்கு நீரேற்றம் செய்யவேண்டும்.
பொம்மிடியை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். கடத்தூர் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். பொதியம்பள்ளம் அணைக்கட்டை மேம்படுத்தவேண்டும். கடத்தூர் பகுதியில் மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது தொகுதி சார்ந்த வாக்காளர்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.
வேட்பாளர்களின் பின்புலம்
தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு 2011-ம் ஆண்டு முதல் இன்று வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் (3 பொதுத்தேர்தல், 1 இடைத்தேர்தல்) அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. 2011, 2016-ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட முனைவர் பி.பழனியப்பன் வெற்றிபெற்று அமைச்சராகவும் இருந்தார்.
பின்னர் டிடிவி தினகரனுடன் சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் 2019-ல் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆ.கோவிந்தசாமி வெற்றிபெற்றார். தொடர்ந்து கடந்த 2021 தேர்தலிலும் கோவிந்தசாமியே வெற்றிபெற்றார்.
2026 தேர்தலில் திமுகவில் இணைந்த பி.பழனியப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில், தருமபுரி நகரமன்றத் தலைவராக இருந்தவரும், அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளருமான எஸ்.ஆர். வெற்றிவேலின் மனைவி மரகதம் முதல் முறையாக போட்டியிடுகிறார். இதுதவிர நாம் தமிழர் கட்சி சார்பில் அர்ச்சனா, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் எஸ்.திலகவதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இருப்பினும் திமுக-அதிமுக இடையில் தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. திமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகள், புதியதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகள், விசிக உள்ளிட்ட கட்சிகளின் மெகா கூட்டணி பலமாக உள்ளதாக திமுக கருதுகிறது.
அதேநேரம், ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, தொகுதியில் வலுவான பாமகவுடனான கூட்டணி, தேர்தல் அறிக்கைகள் தங்களுக்கு சாதகமாக இருப்பதாக அதிமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் ராமதாஸ் ஆதரவாளர்கள், பல்வேறு சமுதாயம் சார்ந்த வணிகர்கள் ஆகியோரின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளன. பலம் வாய்ந்த வேட்பாளர்கள் களத்தில் சுழன்று வருவதால் வெற்றிக்கனி யாருக்கு என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,28,301
பெண் - 1,28,325
மூன்றாம் பாலினத்தவர் - 14
மொத்த வாக்காளர்கள் - 2,56,640